창세기 5장 타밀 OITCE
- 1 ஆதாமின் வம்சவரலாறு இதுவே: இறைவன் மனிதரைப் படைத்தபோது, அவனை இறைவனின் சாயலிலேயே உண்டாக்கினார்.
- 2 அவர் அவர்களை ஆணும் பெண்ணுமாகப் படைத்து, அவர்களை ஆசீர்வதித்தார். அவர் அவர்களைப் படைத்தபோது அவர்களை, “மனிதர்” என்று அழைத்தார்.
- 3 ஆதாம் 130 வருடங்கள் வாழ்ந்தபின், ஆதாமுக்கு தன்னுடைய சாயலிலும், தன்னுடைய உருவிலும் ஒரு மகன் பிறந்தான்; அவனுக்கு “சேத்” என்று பெயரிட்டான்.
- 4 சேத் பிறந்தபின் ஆதாம் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 5 ஆதாம் மொத்தம் 930 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- 6 சேத் தனது 105 வயதில் ஏனோஸுக்குத் தகப்பனானான்.
- 7 சேத் ஏனோஸைப் பெற்றபின் 807 வருடங்கள் வாழ்ந்து இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 8 சேத் மொத்தம் 912 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- 9 ஏனோஸ் தனது 90 வயதில் கேனானுக்குத் தகப்பனானான்.
- 10 கேனான் பிறந்த பிறகு ஏனோஸ் 815 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 11 ஏனோஸ் மொத்தம் 905 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- 12 கேனான் தனது 70 வயதில் மகலாலெயேலுக்குத் தகப்பனானான்.
- 13 மகலாலெயேல் பிறந்த பிறகு, கேனான் 840 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 14 கேனான் மொத்தம் 910 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- 15 மகலாலெயேல் தனது 65 வயதில் யாரேத்திற்குத் தகப்பனானான்.
- 16 யாரேத் பிறந்த பிறகு மகலாலெயேல் 830 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 17 மகலாலெயேல் மொத்தம் 895 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- 18 யாரேத் தனது 162 வயதில் ஏனோக்குக்குத் தகப்பனானான்.
- 19 ஏனோக்கு பிறந்த பிறகு யாரேத் 800 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 20 யாரேத் மொத்தம் 962 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- 21 ஏனோக்கு தனது 65 வயதில் மெத்தூசலாவுக்குத் தகப்பனானான்.
- 22 மெத்தூசலா பிறந்த பிறகு ஏனோக்கு 300 வருடங்கள் இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான். அவன் இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 23 ஏனோக்கு மொத்தம் 365 வருடங்கள் வாழ்ந்தான்.
- 24 ஏனோக்கு இறைவனுடன் நெருங்கிய உறவுடன் அர்ப்பணிப்போடு வாழ்ந்தான்; இறைவன் அவனை எடுத்துக்கொண்டதனால், அதன்பின் அவன் காணப்படவில்லை.
- 25 மெத்தூசலா தனது 187 வயதில் லாமேக்குக்குத் தகப்பனானான்.
- 26 லாமேக்கு பிறந்த பிறகு மெத்தூசலா 782 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 27 மெத்தூசலா மொத்தம் 969 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- 28 லாமேக்கு தனது 182 வயதில் ஒரு மகனுக்குத் தகப்பனானான்.
- 29 அவன், “யெகோவா சபித்த நிலத்தில் நாம் பாடுபட்டு உழைக்கும்போது, இவன் நமக்கு ஆறுதலாயிருப்பான்” என்று சொல்லி, அவனுக்கு நோவா என்று பெயரிட்டான்.
- 30 நோவா பிறந்த பிறகு, லாமேக்கு 595 வருடங்கள் வாழ்ந்து, இன்னும் பல மகன்களையும் மகள்களையும் பெற்றான்.
- 31 லாமேக்கு மொத்தம் 777 வருடங்கள் வாழ்ந்தபின் இறந்தான்.
- 32 நோவாவுக்கு 500 வயதான பின்பு சேம், காம், யாப்பேத் என்னும் மகன்களுக்குத் தகப்பனானான்.