사무엘하 1장 타밀 OITCE
- 1 சவுல் இறந்தபின்பு, தாவீது அமலேக்கியரை முறியடித்து சிக்லாகிற்கு வந்து அங்கே இரண்டு நாட்கள் தங்கியிருந்தான்.
- 2 மூன்றாவது நாள் சவுலின் முகாமிலிருந்து கிழிந்த உடையோடும், புழுதிபடிந்த தலையோடும் ஒரு மனிதன் வந்தான். அவன் தாவீதிடம் வந்தபோது, மரியாதை செலுத்தும்படி தரையில் விழுந்து வணங்கினான்.
- 3 அப்பொழுது தாவீது அவனிடம், “நீ எங்கிருந்து வந்தாய்?” என்று கேட்டான். அதற்கு அவன், “இஸ்ரயேலின் முகாமிலிருந்து தப்பி வந்தேன்” என்றான்.
- 4 மேலும் தாவீது அவனிடம், “என்ன நடந்தது என எனக்குச் சொல்” என்றான். அதற்கு அந்த மனிதன், “போர்க்களத்திலிருந்து மக்கள் ஓடிவிட்டார்கள். பலர் வெட்டுண்டு இறந்துபோனார்கள். அதோடு சவுலும் அவருடைய மகன் யோனத்தானும் இறந்துபோனார்கள்” என்றான்.
- 5 அப்பொழுது தாவீது, அச்செய்தியைக் கொண்டுவந்த வாலிபனிடம், “சவுலும் அவன் மகன் யோனத்தானும் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” எனக் கேட்டான்.
- 6 அதற்கு அவன், “யுத்தத்தில் நான் கில்போவா மலைக்குப் போகநேரிட்டது” எனக் கூறினான். “அங்கே சவுல் தன் ஈட்டியின்மேல் குத்தப்பட்டு கிடந்தார். அவ்வேளையில் தேர்களும், வீரர்கள் ஏறியிருந்த குதிரைகளும் அவனை நெருங்கிக் கொண்டிருந்தன.
- 7 அப்பொழுது அவர் திரும்பி என்னைப் பார்த்து, என்னைக் கூப்பிட்டார். எனவே நான் அவரிடம், ‘நான் உமக்கு என்ன செய்யவேண்டும்?’ எனக் கேட்டேன்.
- 8 “அதற்கு அவர், ‘நீ யார்?’ என்று கேட்டார். “ ‘நான் ஒரு அமலேக்கியன்’ என்றேன்.
- 9 “அப்பொழுது அவர், ‘நீ இங்கு வந்து என்னைக் கொன்றுவிடு; நான் மரண வேதனையுடன் இன்னும் உயிரோடிருக்கிறேன்’ என்றார்.
- 10 “உடனே நான் கிட்டப்போய் அவரைக் கொன்றேன். ஏனெனில் அவர் காயப்பட்டு, விழுந்தபின்பு பிழைக்கமாட்டார் என்பது எனக்குத் தெரிந்தது. அதன்பின் நான் அவர் தலையிலிருந்த அரச கிரீடத்தையும், கையிலிருந்த வளையல்களையும் எடுத்து என் ஆண்டவனாகிய உம்மிடம் கொண்டுவந்தேன்” என்றான்.
- 11 இச்செய்தியைக் கேட்ட தாவீதும், அவனோடிருந்த மனிதர் எல்லோரும் தங்கள் உடைகளைக் கிழித்தார்கள்.
- 12 சவுலும் அவன் மகன் யோனத்தானும், யெகோவாவின் வீரர்களும், இஸ்ரயேல் குடும்பத்தாரும் வாளால் வெட்டுண்டு இறந்ததினால் அவர்கள் துக்கங்கொண்டாடி, அழுது அன்று மாலைவரை அவர்களுக்காக உபவாசமிருந்தார்கள்.
- 13 தாவீது அச்செய்தியை கொண்டுவந்த வாலிபனிடம், “நீ எந்த இடத்தைச் சேர்ந்தவன்?” என்று கேட்டான். அதற்கு அவன், “நான் அந்நியனான ஒரு அமலேக்கியனின் மகன்” என்றான்.
- 14 அப்பொழுது தாவீது அவனிடம், “யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவனை கொல்வதற்கு உன் கையை நீட்ட நீ ஏன் பயப்படவில்லை” எனக் கேட்டான்.
- 15 உடனே தாவீது தன் ஆட்களில் ஒருவனை கூப்பிட்டு, “அவனைக் கொலைசெய்” என்றான். அவ்வாறே பணியாள் அவனைக் கொன்றான்.
- 16 அப்பொழுது தாவீது அவனிடம், “உன் இரத்தப்பழி உன்னுடைய தலைமேல் இருக்கட்டும். ஏனெனில், ‘யெகோவாவினால் அபிஷேகம் செய்யப்பட்டவரை நான் கொன்றேன்’ என உன் வாயே உனக்கெதிராய் சாட்சி சொன்னது” என்றான்.
- 17 தாவீது சவுலுக்காகவும் யோனத்தானுக்காகவும் இந்தப் புலம்பலைப் பாடினான்;
- 18 யூதாவின் மக்களுக்கு இந்த வில்லுப்பாட்டு கற்பிக்கப்பட வேண்டும் என்று அவர்களுக்குக் கட்டளையிட்டான். இது யாசேரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது:
- 19 “இஸ்ரயேலே, உன் மகிமை உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறது. வலிமைமிக்கவர்கள் எப்படி வீழ்ந்தார்கள்!
- 20 “எனவே, இதை காத் பட்டணத்தில் சொல்லவேண்டாம். அஸ்கலோனின் வீதிகளில் பிரசித்தப்படுத்த வேண்டாம். இல்லையெனில், பெலிஸ்தரின் மகள்கள் மகிழ்ச்சியடைவார்கள், விருத்தசேதனம் இல்லாதவர்களின் மகள்கள் களிகூருவார்கள்.
- 21 “கில்போவா மலைகளே, பனியும், மழையும் உங்களுக்கு இல்லாமல் போவதாக. வயல்கள் தானிய காணிக்கைகளைக் கொடுக்காமல் போவதாக. அங்கு தானே வல்லவர்களின் கேடயம் கறைப்பட்டது. சவுலின் கேடயம் இனி ஒருபோதும் எண்ணெய் பூசப்படுவதில்லை.
- 22 “கொலையுண்டவர்களின் இரத்தத்திலிருந்தும் வலியவரின் சதையிலிருந்தும் யோனத்தானின் வில் பின்வாங்கினதில்லை. சவுலின் வாளும் திருப்தியடையாமல் திரும்பினதில்லை.
- 23 வாழும்போது சவுலும் யோனத்தானும் அன்புக்குரியவர்களும், மதிப்புக்குரியவர்களுமாய் இருந்தார்கள். சாவிலும் அவர்கள் பிரியவில்லை. அவர்கள் கழுகுகளைவிட வேகமாய் பறந்தார்கள். சிங்கங்களிலும் வலிமையுள்ளவர்களாய் இருந்தார்கள்.
- 24 “இஸ்ரயேலின் மகள்களே, சிவப்பு உடைகளை உடுத்துவித்தவருக்காக அழுங்கள். உங்கள் உடைகளைத் தங்க நகைகளால் அலங்கரித்த சவுலுக்காக அழுது புலம்புங்கள்.
- 25 “போர்க்களத்தில் வலியவர்கள் விழுந்தார்களே! யோனத்தான் உங்கள் மேடுகளில் கொலையுண்டு கிடக்கிறான்.
- 26 என் சகோதரன் யோனத்தானே! உனக்காக நான் துக்கப்படுகிறேன்; நீ எனக்கு மிக அருமையானவனாய் இருந்தாய். நீ என்மேல் வைத்த அன்பு அற்புதமானது. பெண்களின் அன்பிலும் அது மேலானது.
- 27 “வலியவர் எவ்வாறு வீழ்ந்தார்கள். யுத்த ஆயுதங்கள் அழிந்துவிட்டதே.”