열왕기상 6장 타밀 OITCE
- 1 சாலொமோன் தனது ஆட்சியின் நான்காம் வருடம், இரண்டாம் மாதமாகிய சீப் மாதத்தில், யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான். இது இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து நானூற்று எண்பதாம் வருடமாயிருந்தது.
- 2 அரசன் சாலொமோன் யெகோவாவுக்கென்று கட்டிய ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமும் உள்ளதாயிருந்தது.
- 3 ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் முன்பாக ஒரு முகப்பு மண்டபம் ஆலய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமுடையதாய் ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து பத்து முழம் நீண்டிருந்தது.
- 4 அதில் அலங்கார வேலைப்பாடுள்ள ஒடுக்கமான ஜன்னல்களை அமைத்திருந்தான்.
- 5 பிரதான மண்டபத்தின் சுவர்களுக்கும், பரிசுத்த இடத்தின் உட்பகுதிக்கும் எதிரே கட்டிடத்தைச்சுற்றிப் பக்க அறைகள் உள்ள ஒரு கட்டிடத்தை அமைத்தான்.
- 6 கீழ்த்தளம் ஐந்துமுழ அகலமும், நடுத்தளம் ஆறுமுழ அகலமும், மூன்றாம் தளம் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. ஆலய சுவருக்குள் போகாதபடி ஆலயத்தின் வெளிப்புறத்தைச் சுற்றி ஒட்டுச்சுவர்களை அமைத்தான்.
- 7 ஆலயம் கட்டுவதற்கு கற்குகையில் செதுக்கப்பட்ட கற்பாளங்களே பயன்படுத்தப்பட்டன. அது கட்டப்படும்போது, ஆலயம் கட்டப்படும் இடத்தில் சுத்தியலோ, உளியோ, வேறு எந்த இரும்பு ஆயுதமோ பயன்படுத்தும் சத்தம் கேட்கப்படவில்லை.
- 8 கீழ்த்தளத்து வாசல் ஆலயத்தின் தெற்கு பக்கத்தில் இருந்தது. நடுத்தளத்துக்கு ஒரு படிக்கட்டு இருந்தது. அங்கிருந்து மூன்றாம் மாடிக்கும் மற்றொரு படிக்கட்டு இருந்தது.
- 9 சாலொமோன் வளை மரங்களினாலும், கேதுருமரப் பலகைகளினாலும் கூரையை அமைத்து ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
- 10 அவன் ஆலயம் நெடுகிலும் பக்க அறைகளைக் கட்டினான். அறைகள் ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம். அவை கேதுருமர உத்திரங்களினால் ஆலயத்துடன் இணைக்கப்பட்டன.
- 11 அப்பொழுது யெகோவாவின் வார்த்தை சாலொமோனுக்கு வந்தது.
- 12 அவர், “நீ கட்டும் ஆலயத்தைக் குறித்தோவெனில், நீ என் விதிமுறைகளைப் பின்பற்றி, சட்டங்களை நடைமுறைப்படுத்தி, எனது கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால், உன் தகப்பனாகிய தாவீதுக்கு நான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவேன்.
- 13 நான் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் வாழ்ந்து என் மக்களான இஸ்ரயேலரைக் கைவிடமாட்டேன்” என்றார்.
- 14 அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
- 15 உட்புறச் சுவர்களைக் கேதுரு மரப்பலகைகளினால் தளத்திலிருந்து உட்கூரைவரை மூடினான். ஆலயத்தின் தளத்தை மூடுவதற்காக தேவதாரு பலகைகளைப் பதித்தான்.
- 16 ஆலயத்தில் உள்ள பிற்பகுதியிலிருந்து இருபதுமுழ தூரத்தைப் பிரித்தெடுத்து, நிலத்திலிருந்து உட்கூரைவரை கேதுருமரப் பலகைகளை நிறுத்தி ஆலயத்தின் உள்ளே ஒரு அறையை ஏற்படுத்தினான். அது உள் பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடமாகும்.
- 17 இந்த அறையின் முன் இருந்த பிரதான மண்டபம் நாற்பது முழ நீளமாயிருந்தது.
- 18 ஆலயத்தின் உட்புறம் முழுவதிலும் கேதுரு மரப்பலகை பதிக்கப்பட்டிருந்தது. அவற்றின் இணைப்பில் விரிந்த பூக்களும், வெள்ளரிக்காய்களும் சித்திர வேலைப்பாடாகச் செதுக்கப்பட்டிருந்தன. எல்லாம் கேதுருமரப் பலகையாகவே இருந்தன. ஒரு கல்லும் வெளியே தெரியவில்லை.
- 19 ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடத்தை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென சாலொமோன் ஆயத்தம் பண்ணினான்.
- 20 உட்புற பரிசுத்த இடம் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமுள்ளதாயும் இருந்தது. அதன் உட்புறம் முழுவதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் கேதுருமரப் பலிபீடத்தையும் தங்கத் தகட்டினால் மூடினான்.
- 21 பின்பு சாலொமோன் ஆலயத்தின் உட்பகுதியை சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, பரிசுத்த இடத்துக்கு முன்பாக தங்கச் சங்கிலிகளை நீளமாக குறுக்கே தொங்கும்படி அமைத்தான். அதுவும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தது.
- 22 இவ்விதமாய் உட்புறம் முழுவதையும் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் உட்புற பரிசுத்த இடத்துக்குரிய பலிபீடத்தையும் தங்கத்தகட்டால் மூடினான்.
- 23 உட்புற பரிசுத்த இடத்திலே இரண்டு கேருபீன்களின் உருவத்தைச் செதுக்கி வைத்தான். அவை ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுடையதாக ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டவை.
- 24 முதலாவது கேருபீனின் ஒரு சிறகு ஐந்துமுழ நீளமாயும், அதன் மறு சிறகு ஐந்து முழமாயும் இருந்தன. ஒரு சிறகின் கடைசிமுனை தொடங்கி மற்ற சிறகின் கடைசி முனைவரை பத்து முழமாய் இருந்தது.
- 25 இரண்டாவது கேருபீனும் பத்துமுழ அளவாய் இருந்தது. இரண்டு கேருபீன்களும் அளவிலும், வடிவத்திலும் ஒரேவிதமாய் இருந்தன.
- 26 ஒவ்வொரு கேருபீனும் பத்துமுழ உயரமுடையனவாயிருந்தன.
- 27 கேருபீன்களை ஆலயத்தின் உட்புற அறையில் வைத்தான். அவற்றின் செட்டைகள் விரிந்தபடியிருந்தன. ஒரு கேருபீனின் சிறகு ஒரு சுவரையும், மற்ற கேருபீனின் சிறகு மற்றச் சுவரையும் தொட்டுக்கொண்டிருந்தன. அவற்றின் மற்ற சிறகுகள் அறையின் நடுவில் ஒன்றையொன்று தொட்டபடி இருந்தன.
- 28 அவன் கேருபீன்களை தங்கத்தகட்டால் மூடியிருந்தான்.
- 29 ஆலயத்தின் உட்புறச் சுவர்களெங்கும், உள் அறையிலும், வெளி அறையிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான்.
- 30 அத்துடன் அவன் ஆலயத்தின் உட்புற அறை, வெளிப்புற அறையின் தளங்களைத் தங்கத் தகட்டினால் மூடினான்.
- 31 உட்புற பரிசுத்த இடத்தின் வாசலுக்கு ஒலிவ மரத்தினால் செய்யப்பட்ட கதவுகளையும், ஐங்கோண வடிவமுள்ள பக்க நிலைகளையும் அமைத்தான்.
- 32 அந்த இரண்டு ஒலிவமரக் கதவுகளிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கிய கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும் அடித்த தங்கத்தகட்டால் மூடினான்.
- 33 இவ்விதமாய் அவன் பிரதான மண்டபத்தின் வாசலிலும் ஒலிவ மரத்தால் நாற்கோண வடிவ பக்கநிலைகளைச் செய்துவைத்தான்.
- 34 இரண்டு தேவதாருமரக் கதவுகளைச் செய்தான். அவை ஒவ்வொன்றும் மடிக்கக்கூடியதாக கீழ்களினால் பூட்டப்பட்டிருந்தன.
- 35 இவற்றிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கப்பட்ட வேலையை அடிக்கப்பட்ட தங்கத் தகட்டினால் மூடினான்.
- 36 கற்பாறைகளால் சுவரை கட்டி ஒரு உள்முற்றத்தை அமைத்தான். அந்தச் சுவரின் முதல் மூன்று அடுக்குகளும் கற்களால் கட்டப்பட்டிருந்தன. அதன் நான்காம் அடுக்கு கேதுரு மரத்தால் அமைக்கப்பட்டிருந்தது.
- 37 சாலொமோனின் ஆட்சியின் நான்காம் வருடம் சீப்மாதம் யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திபாரம் போடப்பட்டது.
- 38 ஆலயம் அதற்கான அளவுத்திட்ட விபரத்தின்படி பதினோராம் வருடம் எட்டாம் மாதமாகிய பூல் மாதத்தில் கட்டி முடிக்கப்பட்டது. சாலொமோன் இதைக் கட்டிமுடிக்க ஏழு வருடங்கள் சென்றன.