열왕기하 13장 타밀 OITCE
- 1 யூதாவின் அரசன் அகசியாவின் மகன் யோவாஸ் அரசாண்ட இருபத்துமூன்றாம் வருடத்தில், யெகூவின் மகன் யோவாகாஸ் சமாரியாவில் இஸ்ரயேலுக்கு அரசனானான். இவன் பதினேழு வருடங்கள் அரசாண்டான்.
- 2 இஸ்ரயேலரைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களையே இவனும் பின்பற்றி யெகோவாவின் பார்வையில் தீமையைச் செய்தான். அவன் அவைகளைவிட்டு விலகவேயில்லை.
- 3 எனவே யெகோவாவின் கோபம் இஸ்ரயேலுக்கு எதிராகப் பற்றி எரிந்தது. இதனால் யெகோவா அவர்களை நெடுங்காலத்திற்கு சீரிய அரசன் ஆசகேலின் வலிமையின் கீழும், அவனுடைய மகன் பெனாதாத்தின் கீழும் வைத்திருந்தார்.
- 4 அதன்பின் யோவாகாஸ் யெகோவாவின் தயவைத் தேடினான். சீரிய அரசன் எவ்வளவாய் இஸ்ரயேலை ஒடுக்கித் துன்புறுத்தினான் என்பதை யெகோவா கண்டபடியால், அவர் அவனுடைய மன்றாட்டைக் கேட்டார்.
- 5 யெகோவா இஸ்ரயேலருக்கு ஒரு விடுதலை வீரனைக் கொடுத்தார். இஸ்ரயேலர் சீரியருடைய பிடியிலிருந்து தப்பினார்கள். அதன்பின் இஸ்ரயேலர் முன்பு வாழ்ந்ததுபோல தங்கள் சொந்த வீடுகளில் வாழ்ந்தார்கள்.
- 6 ஆயினும் யெரொபெயாம் இஸ்ரயேலைச் செய்யப்பண்ணின பாவங்களிலிருந்து அவர்கள் திரும்பாமல், அவைகளைத் தொடர்ந்து செய்து கொண்டுவந்தார்கள். அத்துடன் அசேரா விக்கிரக தூண் இன்னும் சமாரியாவில் இருந்தது.
- 7 யோவாகாஸின் இராணுவத்தில் ஐம்பது குதிரைவீரர், பத்து தேர்கள், பத்தாயிரம் காலாட்படை வீரரைத் தவிர வேறொன்றும் மீந்திருக்கவில்லை. ஏனெனில் சீரிய அரசன் இஸ்ரயேலில் மீதியானவர்களை அழித்து, சூடுமிதிக்கும் காலத்திலுள்ள புழுதியைப்போலாக்கிப் போட்டான்.
- 8 யோவாகாஸின் ஆட்சியின் மற்ற நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
- 9 யோவாகாஸ் தன் முற்பிதாக்களைப்போல இறந்து, சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய மகன் யோவாஸ் அரசனானான்.
- 10 யூதாவின் அரசன் யோவாசின் ஆட்சியின் முப்பத்தேழாம் வருடத்தில் யோவாகாஸின் மகன் யோவாஸ் இஸ்ரயேலில் அரசனானான். இவன் சமாரியாவிலிருந்து பதினாறு வருடங்கள் ஆட்சிசெய்தான்.
- 11 இவன் யெகோவாவின் பார்வையில் தீமையானவற்றைச் செய்தான். இஸ்ரயேலைப் பாவம் செய்யப்பண்ணின நேபாத்தின் மகன் யெரொபெயாமின் பாவங்களில் எதையும் அவன் விடாமல் அவற்றைத் தொடர்ந்து செய்து வந்தான்.
- 12 இஸ்ரயேல் அரசன் யோவாஸ் நிகழ்வுகளும், அவன் செய்தவைகளும், அவனுடைய சாதனைகளும் யூதாவின் அரசன் அமத்சியாவுடன் அவன் செய்த யுத்தம் உட்பட அவனுடைய சதிகள் யாவும், இஸ்ரயேல் அரசர்களின் வரலாற்றுப் புத்தகத்திலல்லவோ எழுதப்பட்டுள்ளன.
- 13 யோவாஸ் தன் முற்பிதாக்களுடன் இளைப்பாறினான். மற்ற இஸ்ரயேல் அரசர்களை அடக்கம்பண்ணும் இடத்தில் சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவனுடைய அரியணையில் யெரொபெயாம் அரசனானான்.
- 14 இந்த நாட்களில் எலிசா வியாதியினால் துன்பப்பட்டான். இந்த வியாதியே பின் அவனுடைய மரணத்துக்குக் காரணமாயிருந்தது. அப்பொழுது இஸ்ரயேலின் அரசன் யோவாஸ் அவனைப் பார்க்கப்போய், “என் தந்தையே! தந்தையே! இஸ்ரயேலுக்கு தேர்களையும், குதிரைவீரர்களையும்போல் இருந்தவரே!” என்று சொல்லி அவனுக்காக அழுதான்.
- 15 எலிசா அவனை நோக்கி, “ஒரு வில்லும் சில அம்புகளும் கொண்டுவா” என்றான் அவன் அப்படியே கொண்டுவந்தான்.
- 16 எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “வில்லை உம்முடைய கைகளில் எடும்” என்றான். அரசன் அவ்வாறே எடுத்தபோது, எலிசா தன் கையை அரசனின் கையில் வைத்தான்.
- 17 “கிழக்குப் பக்கமாக ஜன்னலைத் திறந்திடும்” என்றான். அப்படியே அரசன் ஜன்னலைத் திறந்தான். அப்பொழுது எலிசா, “எய்திடும்” என்றான். அவன் அப்படியே செய்தான். எலிசா அவனைப் பார்த்து, “இது யெகோவாவினுடைய வெற்றியின் அம்பு. சீரியரின்மேல் வெற்றியைக் கொண்டுவரும் அம்பு; நீ சீரியரை ஆப்பெக்கில் முழுவதுமாக அழித்துப்போடுவாய்” என்று கூறினான்.
- 18 அதன்பின்பும் எலிசா அரசனை நோக்கி, “அந்த அம்புகளை எடும்” என்றான். அரசன் அவற்றை எடுத்தான். அப்பொழுது எலிசா இஸ்ரயேலின் அரசனிடம், “அவற்றை நிலத்தில் அடியும்” என்றான். அவன் மூன்றுமுறை அடித்து நிறுத்தினான்.
- 19 இறைவனுடைய மனிதன் அவன்மேல் கோபங்கொண்டு, “நீர் நிலத்தில் ஐந்துமுறை அல்லது ஆறுமுறை அடித்திருக்க வேண்டும். அவ்வாறு அடித்திருந்தால் சீரியாவை முழுவதும் தோற்கடித்திருப்பீர். இப்போதோ மூன்றுமுறை மாத்திரம் தான் சீரியாவை தோற்கடிப்பீர்” என்றான்.
- 20 அதன்பின் எலிசா இறந்து அடக்கம் செய்யப்பட்டான். மோவாபிய கொள்ளையர் ஒவ்வொரு வருடமும் வசந்தகாலத்தில் நாட்டுக்குள் நுழைவது வழக்கமாயிருந்தது.
- 21 ஒருமுறை இஸ்ரயேலர் ஒரு மனிதனை அடக்கம்பண்ணிக்கொண்டிருக்கையில் திடீரென ஒரு கொள்ளைக் கூட்டத்தைக் கண்டார்கள். உடனே அந்த உடலை எலிசாவின் கல்லறைக்குள் தூக்கி எறிந்தார்கள். அந்த உடல் எலிசாவின் எலும்புகளில் பட்டவுடனே அவன் உயிர்பெற்று தன் கால்களை ஊன்றி எழுந்து நின்றான்.
- 22 யோவாகாசின் ஆட்சிக் காலமெல்லாம் சீரிய அரசனாகிய ஆசகேல் இஸ்ரயேலரை ஒடுக்கினான்.
- 23 ஆனால் யெகோவா ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோருடன் செய்த உடன்படிக்கைக்காக அவர்கள்மேல் கிருபையாயிருந்து அவர்களில் இரக்கமும், கரிசனையும் காட்டினார். இன்றுவரை அவர் தமது முன்னிலையிலிருந்து அவர்களை அழிக்கவோ, அகற்றவோ விருப்பமற்றவராகவே இருக்கிறார்.
- 24 சீரிய அரசன் ஆசகேல் இறந்தான். அவனுக்குப்பின் அவன் மகன் பெனாதாத் அரசனானான்.
- 25 யோவாகாசின் மகன் யோவாஸ் தன் தகப்பன் யோவாகாசிடமிருந்து, ஆசகேலின் மகனான பெனாதாத் கைப்பற்றிய நகரங்களை அவனிடமிருந்து திரும்பவும் பிடித்தான். யோவாஸ் அவனை மூன்றுமுறை தோற்கடித்து இஸ்ரயேல் பட்டணங்களைத் திரும்பப் பிடித்துக்கொண்டான்.