역대상 16장 타밀 OITCE
- 1 அவர்கள் இறைவனுடைய உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவந்து, தாவீது அதற்கென அமைத்த கூடாரத்திற்குள் வைத்தார்கள். பின்பு அவர்கள் இறைவனுக்குமுன் தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தினார்கள்.
- 2 தாவீது தகன காணிக்கைகளையும், சமாதான காணிக்கைகளையும் செலுத்தி முடித்தபின்பு, அவன் மக்களை யெகோவாவினுடைய பெயரில் ஆசீர்வதித்தான்.
- 3 பின்பு அவன் ஒவ்வொரு இஸ்ரயேலின் ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனியே ஒரு அப்பத்தையும், ஒரு பேரீச்சம்பழ அடையையும், ஒரு திராட்சைப்பழ அடையையும் கொடுத்தான்.
- 4 தாவீது சில லேவியர்களை யெகோவாவின் பெட்டிக்குமுன் பணிசெய்யவும், வேண்டுதல் செய்யவும், நன்றி செலுத்தவும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவைத் துதிப்பதற்குமென நியமித்தான்.
- 5 அவர்களுக்கு தலைவனாக ஆசாப்பும், இரண்டாவதாக சகரியாவும், அவனுக்கு அடுத்ததாக ஏயேல், செமிராமோத், யெகியேல், மத்தித்தியா, எலியாப், பெனாயா, ஓபேத் ஏதோம், ஏயேல் ஆகியோரும் இருந்தார்கள். இவர்கள் யாழ், வீணை வாசிக்க நியமிக்கப்பட்டார்கள். கைத்தாளம் போடுவதற்காக ஆசாப் நியமிக்கப்பட்டான்.
- 6 அத்துடன் இறைவனின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் ஒழுங்காக எக்காளம் ஊதுவதற்காக ஆசாரியர்களான பெனாயாவும், யாகாசியேலும் நியமிக்கப்பட்டார்கள்.
- 7 அன்றையதினம் தாவீது யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி ஆசாப்பிடமும், அவனுடைய உதவியாளர்களிடமும் முதன்முதலாக கொடுத்த பாடல் இதுவே:
- 8 யெகோவாவுக்கு நன்றி செலுத்தி, அவருடைய பெயரை பறைசாற்றுங்கள்; அவர் செய்தவற்றை நாடுகளுக்குள் தெரியப்படுத்துங்கள்.
- 9 அவரைப் பாடுங்கள். அவருக்குத் துதி பாடுங்கள்; அவருடைய அதிசயமான செயல்களையெல்லாம் எடுத்துச் சொல்லுங்கள்.
- 10 அவருடைய பரிசுத்த பெயரில் பெருமிதம் கொள்ளுங்கள்; யெகோவாவைத் தேடுகிறவர்களின் இருதயம் மகிழ்வதாக.
- 11 யெகோவாவையும் அவர் வல்லமையையும் நோக்கிப்பாருங்கள்; எப்பொழுதும் அவர் முகத்தையே தேடுங்கள்.
- 12 அவர் செய்த அதிசயங்களையும், அவருடைய அற்புதங்களையும், அவர் கொடுத்த நியாயத்தீர்ப்புகளையும் நினைவிற்கொள்ளுங்கள்.
- 13 அவருடைய ஊழியராம் இஸ்ரயேலின் சந்ததிகளே, அவர் தெரிந்துகொண்ட யாக்கோபின் பிள்ளைகளே,
- 14 அவரே நமது இறைவனாகிய யெகோவா; அவரது நியாயத்தீர்ப்புகள் பூமியெங்கும் உள்ளன.
- 15 அவர் தமது உடன்படிக்கையை என்றென்றும் நினைவுகூருகிறார்; ஆயிரம் தலைமுறைகளுக்கு அவர் செய்த வாக்குறுதியையும்,
- 16 ஆபிரகாமோடு அவர் செய்த உடன்படிக்கையையும், ஈசாக்கிற்கு அவர் இட்ட ஆணையையும் நினைவுகூருகிறார்.
- 17 அவர் அதை யாக்கோபுக்கு ஒரு விதிமுறையாகவும், இஸ்ரயேலுக்கு நித்திய உடன்படிக்கையாகவும் உறுதிப்படுத்தி சொன்னதாவது:
- 18 “உங்களுடைய உரிமைச்சொத்தாக, கானான் நாட்டை நான் உனக்குக் கொடுப்பேன்.”
- 19 அவர்கள் எண்ணிக்கையில் கொஞ்சமாய், உண்மையிலேயே மிகச் சிலராகவும் வேற்று நாட்டினராகவும் இருந்தபோது,
- 20 அவர்கள் ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டிற்கும், ஒரு அரசிலிருந்து இன்னொரு அரசிற்கும் அலைந்து திரிந்தார்கள்.
- 21 அவர்களை ஒடுக்குவதற்கு அவர் யாரையும் அனுமதிக்கவில்லை; அவர்களுக்காக அவர் அரசர்களைக் கண்டித்துச் சொன்னதாவது:
- 22 “நான் அபிஷேகம் செய்தவர்களைத் தொடவேண்டாம்; என் இறைவாக்கினருக்குத் தீமை செய்யவேண்டாம்.”
- 23 பூமியில் உள்ளவர்களே, எல்லோரும் யெகோவாவுக்குத் துதி பாடுங்கள், நாள்தோறும் அவருடைய இரட்சிப்பைப் பிரசித்தப்படுத்துங்கள்.
- 24 நாடுகளுக்குள்ளே அவரது மகிமையையும், மக்கள் எல்லோருக்கும் அவரது அற்புத செயல்களையும் அறிவியுங்கள்.
- 25 ஏனெனில் யெகோவா மேன்மையானவர், அவரே மிகவும் துதிக்கப்படத்தக்கவர்; எல்லா தெய்வங்களுக்கும் மேலாக பயப்படத்தக்கவர் அவரே.
- 26 நாடுகளின் தெய்வங்கள் எல்லாம் விக்கிரகங்களாகவே இருக்கின்றன; ஆனால் யெகோவாவே வானங்களை உண்டாக்கினார்.
- 27 மாட்சிமையும் மகத்துவமும் அவருக்கு முன்பாக இருக்கின்றன; வல்லமையும் மகிழ்ச்சியும் அவரது உறைவிடத்தில் இருக்கின்றன.
- 28 நாடுகளின் குடும்பங்களே, யெகோவாவுக்கு மகிமையையும் வல்லமையையும் செலுத்துங்கள்; யெகோவாவுக்கே அதைச் செலுத்துங்கள்.
- 29 யெகோவாவின் பெயருக்குரிய மகிமையை அவருக்குச் செலுத்துங்கள்; காணிக்கையை எடுத்துக்கொண்டு அவர்முன் வாருங்கள். அவருடைய பரிசுத்தத்தின் மகிமையிலே யெகோவாவை வழிபடுங்கள்.
- 30 பூமியில் உள்ள யாவரும் அவருக்குமுன் நடுங்குங்கள்; உலகம் உறுதியாய் நிலைநிறுத்தப்பட்டுள்ளது; அது அசையாது.
- 31 வானங்கள் மகிழட்டும், பூமி களிகூரட்டும்; அவைகள், “யெகோவா ஆளுகை செய்கிறார்!” என்று நாடுகளுக்குள்ளே சொல்லட்டும்.
- 32 கடலும் அதிலுள்ள அனைத்தும் சத்தமிடட்டும்; வயல்வெளிகளும் அவைகளிலுள்ள அனைத்தும் பூரிப்படையட்டும்!
- 33 காட்டு மரங்கள் அனைத்தும் மகிழ்ச்சியாய்ப் பாடட்டும், அவை யெகோவாவுக்கு முன்பாக மகிழ்ந்து பாடட்டும், ஏனெனில் யெகோவா பூமியை நியாயந்தீர்க்க வருகிறார்.
- 34 யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவர் நல்லவர். அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
- 35 “இறைவனே, எங்கள் இரட்சகரே, எங்களைக் காப்பாற்றும்; பிற நாடுகளிடமிருந்து எங்களை விடுவித்து சேர்த்துக்கொள்ளும். அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்” என்று சொல்லுங்கள்.
- 36 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். அப்பொழுது எல்லா மக்களும், “ஆமென், யெகோவாவுக்கு துதி உண்டாவதாக” என்று சொன்னார்கள்.
- 37 பின்பு தாவீது ஆசாப்பையும், அவனுடைய உதவியாளர்களையும் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியின் முன்னே, அன்றாட தேவைகளுக்கேற்றபடி ஒழுங்காகப் பணிசெய்யும்படி விட்டான்.
- 38 அவர்களோடு சேர்த்து ஓபேத் ஏதோமையும், அவனுடைய உதவியாளர்கள் அறுபத்தெட்டுபேரையும் பணிசெய்யும்படி விட்டான். எதுத்தூனின் மகன் ஓபேத் ஏதோமும் அவனோடு ஓசாவும் வாசல் காவலர்களாக இருந்தார்கள்.
- 39 தாவீது ஆசாரியன் சாதோக்கையும் அவனுடைய உதவி ஆசாரியர்களையும், கிபியோனிலுள்ள உயர்ந்த மேட்டிலே யெகோவாவின் வழிபாட்டுக் கூடாரத்திற்கு முன்பாக விட்டான்.
- 40 இஸ்ரயேலுக்கு யெகோவா எழுதிக்கொடுத்த சட்டத்தின்படியெல்லாம், காலையிலும் மாலையிலும் ஒழுங்காக பலிபீடங்களில் யெகோவாவுக்கு தகன காணிக்கைகளைச் செலுத்தும்படி இவர்கள் எல்லோரையும் விட்டான்.
- 41 அவர்களோடு ஏமானும், எதுத்தூனும், பெயரின்படி தெரிந்துகொள்ளப்பட்டு நியமிக்கப்பட்ட மற்றவர்களும், “அவரது அன்பு என்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று யெகோவாவுக்கு நன்றி செலுத்தும்படி இருந்தார்கள்.
- 42 இறைவனைப் பாடும் பரிசுத்த பாடல்களுக்காக எக்காளங்களையும் கைத்தாளங்களையும் ஒலிக்கவும், மற்ற வாத்தியங்களை மீட்டவும் ஏமானும் எதுத்தூனும் பொறுப்பாக இருந்தார்கள். எதுத்தூனின் மகன்கள் வாசலில் நிறுத்தப்பட்டிருந்தார்கள்.
- 43 பின்பு ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள், தாவீது தன் குடும்பத்தை ஆசீர்வதிப்பதற்காக தன் வீட்டிற்குப் போனான்.