역대상 23장 타밀 OITCE
- 1 தாவீது வயதுசென்று முதியவனானபோது, தனது மகன் சாலொமோனை இஸ்ரயேலுக்கு அரசனாக்கினான்.
- 2 அதோடு இஸ்ரயேலரின் எல்லாத் தலைவர்களையும், ஆசாரியர்களையும், லேவியர்களையும் ஒன்றுகூட்டினான்.
- 3 லேவியர்களுள் முப்பது வயதுமுதல் அதற்கு மேற்பட்டவர்கள் எண்ணப்பட்டபோது, அவர்களுடைய எண்ணிக்கை முப்பத்தெட்டாயிரமாயிருந்தது.
- 4 அப்பொழுது தாவீது, “இவர்களில் இருபத்து நாலாயிரம்பேர் யெகோவாவினுடைய ஆலயத்தின் வேலைகளை மேற்பார்வை செய்பவர்களாகவும், ஆறாயிரம்பேர் அதிகாரிகளாகவும் நீதிபதிகளாகவும் இருக்கட்டும்.
- 5 அதோடு நாலாயிரம்பேர் வாசல் காவலர்களாகவும், மற்ற நாலாயிரம்பேர் நான் யெகோவாவைத் துதிப்பதற்கென செய்துவைத்திருந்த இசைக்கருவிகளுடன் யெகோவாவைத் துதிக்கவும் வேண்டும்” என்றான்.
- 6 பின்பு தாவீது லேவியர்களின் மகன்களான கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்களுடைய வகுப்புகளின்படி அவர்களைக் குழுக்களாகப் பிரித்தான்.
- 7 கெர்சோனியரில் லாதானும் சீமேயியும் இருந்தார்கள்.
- 8 லாதானின் மகன்கள்: மூத்தவனான யெகியேல், சேத்தாம், யோயேல் ஆகிய மூன்றுபேர்.
- 9 சீமேயியின் மகன்கள்: செலோமோத், ஆசியேல், ஆரான் ஆகிய மூன்றுபேர்; இவர்கள் லாதானின் குடும்பங்களில் தலைவர்களாய் இருந்தார்கள்.
- 10 சீமேயியின் மற்ற மகன்கள்: யாகாத், சீனா, எயூஷ், பெரீயா ஆகிய இவர்களும் சீமேயியின் நான்கு மகன்கள்.
- 11 இவர்களில் யாகாத் மூத்தவன்; சீசா இரண்டாம் மகன். ஆனால் எயூஷூக்கும், பெரீயாவுக்கும் அதிக மகன்கள் இல்லாதபடியினால் அவர்கள் ஒரே முற்பிதாவின் குடும்பமாகக் கணக்கிடப்பட்டு, ஒரே பொறுப்புகளும் வழங்கப்பட்டன.
- 12 கோகாத்தின் மகன்கள்: அம்ராம், இத்சார், எப்ரோன், ஊசியேல் என்னும் நான்குபேர்.
- 13 அம்ராமின் மகன்கள்: ஆரோன், மோசே. ஆரோனும், அவனுடைய வழித்தோன்றல்களும் என்றென்றைக்கும் மகா பரிசுத்த இடத்தை தூய்மையாக வைத்திருப்பதற்கும், யெகோவாவுக்கு பலியிடுவதற்கும், அவருக்குப் பணிசெய்வதற்கும், அவருடைய பெயரில் ஆசீர்வதிப்பதற்குமென வேறுபிரிக்கப்பட்டனர்.
- 14 இறைவனின் மனிதனாகிய மோசேயின் மகன்கள் லேவி கோத்திரத்தோடு சேர்த்துக் கணக்கிடப்பட்டனர்.
- 15 மோசேயின் மகன்கள்: கெர்சோம், எலியேசர்.
- 16 கெர்சோனின் சந்ததிகள்: செபுயேல் மூத்தவனாயிருந்தான்.
- 17 எலியேசரின் சந்ததிகள்: ரெகேபியா மூத்தவன். எலியேசருக்கு வேறு மகன்கள் இருக்கவில்லை. ஆனால் ரெகபியாவுக்கு அநேகம் மகன்கள் இருந்தனர்.
- 18 இத்சாரின் மகன்கள்: செலோமித் மூத்தவனாயிருந்தான்.
- 19 எப்ரோனின் மகன்கள்: யெரியா மூத்தவன், இரண்டாவது அமரியா, மூன்றாவது யாகாசியேல், நான்காவது எக்காமியாம்.
- 20 ஊசியேலின் மகன்கள்: மூத்த மகன் மீகா, இரண்டாவது மகன் இஷியா.
- 21 மெராரியின் மகன்கள்: மகேலி, மூஷி. மகேலியின் மகன்கள்: எலெயாசார், கீஸ்.
- 22 எலெயாசாருக்கு மகன்கள் இல்லாமலே அவன் இறந்துபோனான். அவனுக்கு மகள்கள் மாத்திரமே இருந்தார்கள். அவர்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர்களான கீஸின் மகன்கள் அவர்களைத் திருமணம் செய்துகொண்டார்கள்.
- 23 மூஷியின் மகன்கள்: மகேலி, ஏதேர், எரேமோத்.
- 24 இவர்கள் குடும்பங்களின்படி பிரிக்கப்பட்ட லேவியின் சந்ததிகள். குடும்பத் தலைவர்கள் தனித்தனியே கணக்கிடப்பட்டு, குடும்பப் பட்டியலின்கீழ் பதிவு செய்யப்பட்டார்கள். இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமான இவர்கள் யெகோவாவின் ஆலயத்தில் பணிசெய்தனர்.
- 25 அப்பொழுது தாவீது, “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா தனது மக்களுக்கு அமைதியைக் கொடுத்து எருசலேமில் என்றென்றைக்கும் வசிக்க வந்திருக்கிறார்.
- 26 ஆதலால் லேவியர்கள் இனிமேல் பரிசுத்த வழிபாட்டுக் கூடாரங்களையோ, அதன் பணிக்குப் பயன்படுத்தத் தேவையான பொருட்களையோ தூக்கிச் சுமக்க வேண்டியதில்லை” எனச் சொன்னான்.
- 27 தாவீதின் இறுதி அறிவுறுத்தலின்படி கணக்கிடப்பட்ட லேவியர் இருபது வயதும் அதற்கு மேற்பட்டவர்களுமே.
- 28 யெகோவாவின் பரிசுத்த ஆலயத்தில் பணிசெய்யும் ஆரோனின் சந்ததிகளுக்கு உதவி செய்வதே, லேவியர்களாகிய இவர்களின் கடமையாயிருந்தது. அவையாவன: வெளிமுற்றத்திற்கும், அருகிலுள்ள அறைகளுக்கும் பொறுப்பாயிருத்தல், இறைவனுடைய ஆலயத்தில் பரிசுத்த பொருட்களை சுத்திகரிப்பதற்கும், மற்றும் அங்கு செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் செய்வதற்கும் பொறுப்பாயிருத்தல்,
- 29 அதோடு மேஜையில் வைக்கும் அப்பங்கள், தானிய காணிக்கைக்குத் தேவையான மிருதுவான மாவு, புளிப்பற்ற அப்பங்கள் ஆகியவற்றைப் பிசையவும், சுடவும், நிறுக்கவும், அத்துடன் அதன் தொகையையும், பருமனையும் கவனிப்பதற்கும் பொறுப்பாயிருத்தல்.
- 30 அவர்கள் ஒவ்வொருநாள் காலையிலும் யெகோவாவுக்கு நன்றிகூறி துதிக்கவேண்டும். அப்படியே மாலையிலும் செய்யவேண்டும்.
- 31 அத்துடன் ஓய்வுநாட்களிலும், அமாவாசை நாட்களிலும் குறிப்பிட்ட பண்டிகை நாட்களிலும் யெகோவாவுக்குத் தகன காணிக்கைகளைச் செலுத்தும் போதெல்லாம் அவ்வாறே துதிக்கவேண்டும். அவர்கள் யெகோவாவுக்கு முன்குறிப்பிட்ட எண்ணிக்கையின்படியும், கட்டளைப்படியும் ஒழுங்காக பணிசெய்ய வேண்டும்.
- 32 எனவே லேவியரான இவர்கள் ஆரோனின் சந்ததிகளான தங்கள் சகோதரர்களின் தலைமையின்கீழ், யெகோவாவின் ஆலயப் பணியில் நியமிக்கப்பட்ட ஆசரிப்புக் கூடாரத்திற்கும், மகா பரிசுத்த இடத்திற்கும் பொறுப்புகளைச் செய்தார்கள்.