욥기 39장 타밀 OITCE
- 1 “மலை ஆடுகள் குட்டி ஈனும் காலத்தை நீ அறிவாயோ? பெண்மான் குட்டி ஈன்றதை நீ கண்டிருக்கிறாயோ?
- 2 அவை சினைப்பட்டிருக்கும் மாதங்களை நீ கணக்கிடுவாயோ? அவை குட்டி ஈனும் நேரத்தை நீ அறிவாயோ?
- 3 அவை முடங்கிக்கிடந்து தங்கள் குட்டிகளை ஈனும்; குட்டி ஈன்றதும் அவைகளின் வலி நீங்கிவிடும்.
- 4 அவைகளின் குட்டிகள் காடுகளில் பெலனடைந்து வளர்கின்றன, அவை திரும்பவும் தாயிடம் திரும்பி வருவதில்லை.
- 5 “காட்டுக் கழுதையைச் சுதந்திரமாகத் திரியவிட்டவர் யார்? அதின் கட்டுகளை அவிழ்த்தவர் யார்?
- 6 நானே அதற்குப் பாழ்நிலத்தை வீடாகவும், உவர்நிலத்தைக் குடியிருப்பாகவும் கொடுத்தேன்.
- 7 அது பட்டணத்துச் சந்தடியை அலட்சியம் பண்ணுகிறது; ஓட்டுகிறவனுடைய சத்தத்தை அது கேட்பதில்லை.
- 8 அது மலைகளைத் தனது மேய்ச்சலிடமாக்குகிறது; அங்கு பச்சைத் தாவரங்களைத் தேடி அலைகிறது.
- 9 “காட்டெருது உனக்கு சேவைசெய்ய சம்மதிக்குமோ? அது உனது தொழுவத்தில் இரவைக் கழிக்குமோ?
- 10 காட்டெருதுக்கு மூக்கணாங்கயிறு போட்டு, அதை உன்னால் உழமுடியுமோ? அது உனக்குப்பின் உழுதுகொண்டு வருமோ?
- 11 அதின் மிகுந்த பலத்தை நம்பி, உன் கடின வேலைகளை அதனிடம் விட்டுவிடுவாயோ?
- 12 அது கதிர்க்கட்டுகளைச் சேர்த்து, சூடடிக்கும் களத்தில் கொண்டுவந்து சேர்க்கும் என்று நீ அதை நம்புவாயோ?
- 13 “தீக்கோழி தன் சிறகுகளைச் சந்தோஷத்தோடு விரித்தாலும், நாரையின் சிறகுகளுடனும் சிறகுகளுடனும் அதை ஒப்பிட முடியாது.
- 14 தீக்கோழி தரையில் முட்டைகளை இட்டு, மணலிலே அவற்றைச் சூடாகும்படி விட்டுவிடுகிறது.
- 15 முட்டைகள் கால்கள்பட்டு நசுங்கிவிடும் என்றோ, காட்டு மிருகங்கள் அவற்றை மிதித்துவிடும் என்றோ அது எண்ணுகிறதில்லை.
- 16 அது தன் குஞ்சுகளைத் தன்னுடையது அல்லாததுபோல் கடுமையாக நடத்தும்; அதின் பிரயாசம் வீணாய் போகிறதென்றும் அது கவலைப்படுவதில்லை.
- 17 ஏனெனில், இறைவன் அதற்கு ஞானத்தை கொடுக்கவில்லை; நல்லுணர்வையும் கொடுக்கவில்லை.
- 18 ஆனாலும் அது ஓடுவதற்கு தன் செட்டைகளை விரிக்கின்றபோது, குதிரையையும் அதில் சவாரி செய்பவனையும் அலட்சியம் பண்ணுகிறது.
- 19 “குதிரைக்கு அதின் பலத்தை நீ கொடுக்கிறாயோ? அதின் கழுத்தைப் பிடரிமயிரினால் மூடியது நீயோ?
- 20 நீ குதிரையை வெட்டுக்கிளியைப்போல் பாயப்பண்ணி, அதின் பெருமையான மூச்சுடன் பயங்கரமூட்டப் பண்ணுகிறாயோ?
- 21 அது தன் பெலத்தில் மகிழ்ச்சியடைந்து, தூசியைக் கிளப்பிக்கொண்டு போர்க்களத்திற்குப் பாய்ந்து செல்கிறது.
- 22 அது பயத்தைக்கண்டு சிரிக்கிறது; ஒன்றுக்கும் கலங்குவதில்லை. அது வாளுக்குப் பயந்து பின்வாங்குவதில்லை.
- 23 மினுமினுக்கும் வேலுடனும் ஈட்டியுடனும் அம்புக்கூடு அதனுடைய இடுப்பில் கலகலக்கிறது.
- 24 அது உணர்ச்சிவசப்பட்டுப் பதற்றத்துடன் தரையில் விரைந்து செல்கிறது; எக்காள சத்தம் கேட்கும்போது, அதினால் அமைதியாய் நிற்கமுடியாது.
- 25 எக்காள முழக்கம் கேட்கும்போது, அது கனைத்து ஆரவாரிக்கும் அது போர்க்களத்தையும், படைத் தலைவர்களின் கூக்குரலையும் தூரத்திலிருந்தே மோப்பம் பிடித்து அறிகிறது.
- 26 “பருந்து உயரப் பறப்பதும், தெற்கு நோக்கித் தன் சிறகுகளை விரிப்பதும் உன் ஞானத்தினாலேயோ?
- 27 கழுகு மேலே போய் உயரத்தில் தன் கூட்டைக் கட்டுவது உனது கட்டளையினாலேயோ?
- 28 அது இரவில் கற்பாறைகளின் வெடிப்புகளில் தங்குகிறது; செங்குத்தான பாறைகளே அதின் பாதுகாப்பிடம்.
- 29 அங்கிருந்து அது தனது உணவைப் பார்க்கும்; அதின் கண்கள் தொலைவிலிருக்கும் உணவைக் கண்டுகொள்ளும்.
- 30 அதின் குஞ்சுள் இரத்தத்தை உண்டு மகிழும்; இறந்த உடல்கள் எங்கேயோ அங்கேயே கழுகும் இருக்கும்.”