시편 106편 타밀 OITCE
- 1 யெகோவாவைத் துதியுங்கள். யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், ஏனெனில் அவர் நல்லவர்; அவருடைய அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது.
- 2 யெகோவாவின் வல்லமையான செயல்களைப் பிரசித்தப்படுத்தவும், அவருடைய புகழை முழுமையாக அறிவிக்கவும் யாரால் முடியும்?
- 3 நியாயமாய் செயல்படுகிறவர்கள், எப்பொழுதும் நீதியானதைச் செய்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
- 4 யெகோவாவே, நீர் உமது மக்களுக்குத் தயவு காண்பிக்கும்பொழுது, என்னையும் நினைவில்கொள்ளும், நீர் அவர்களை மீட்கும்போது, எனக்கும் உதவிசெய்யும்.
- 5 அதினால் நீர் தெரிந்துகொண்ட மக்களின் நல்வாழ்வை அவர்களோடு சேர்ந்து நானும் அனுபவிப்பேன். உமது நாட்டுக்குரிய மகிழ்ச்சியில் நான் பங்குகொள்வேன்; உமது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களுடன் இணைந்து உமக்குத் துதி செலுத்துவேன்.
- 6 எங்கள் முன்னோர்கள் செய்ததுபோலவே, நாங்களும் பாவம்செய்தோம், நாங்கள் அநியாயம் செய்து, கொடுமையாய் நடந்தோம்.
- 7 எங்கள் முன்னோர்கள் எகிப்தில் இருந்தபோது, அவர்கள் உமது அற்புதங்களைக் கொஞ்சமும் நினைத்துப் பார்க்கவில்லை; அவர்கள் உம்முடைய உடன்படிக்கையின் அன்பின் கிரியைகளையும் நினைவில்கொள்ளவில்லை; கடலின், செங்கடலின் ஓரத்திலே அவர்கள் கலகம் செய்தார்கள்.
- 8 ஆனாலும் யெகோவா தமது மகத்தான வல்லமையை அறியப்பண்ணும்படி, தமது பெயரின் நிமித்தம் அவர்களைக் இரட்சித்தார்.
- 9 அவர் செங்கடலை அதட்டினார், அது வறண்டுபோயிற்று; அவர்களை ஒரு காய்ந்த தரையில் நடத்திச் செல்வதுபோல் அதின் வழியே நடத்தினார்.
- 10 அவர் அவர்களை எதிரிகளின் கைகளிலிருந்து காப்பாற்றினார்; பகைவரின் கையிலிருந்து அவர்களை மீட்டுக்கொண்டார்.
- 11 அவர்களுடைய எதிரிகளை வெள்ளம் மூடிக்கொண்டது; அவர்களில் ஒருவனும் உயிர் தப்பவில்லை.
- 12 அப்பொழுது அவருடைய மக்கள் அவருடைய வாக்குத்தத்தங்களை விசுவாசித்து, அவருடைய துதியைப் பாடினார்கள்.
- 13 ஆனாலும், அவர் செய்தவற்றை அவர்கள் விரைவாய் மறந்தார்கள்; அவருடைய ஆலோசனைக்கு அவர்கள் காத்திருக்கவில்லை.
- 14 பாலைவனத்தில் இருக்கும்போதே, அவர்கள் தங்கள் இச்சைக்கு இடங்கொடுத்தார்கள்; பாழ்நிலத்திலே அவர்கள் இறைவனைச் சோதித்தார்கள்.
- 15 எனவே அவர்கள் கேட்டதை அவர் அவர்களுக்குக் கொடுத்தார்; ஆனாலும் மனச்சோர்வை அவர்கள்மேல் அனுப்பினார்.
- 16 அவர்கள் முகாமில் இருக்கும்போது மோசேயின்மீதும், யெகோவாவுக்கென்று அர்ப்பணிக்கப்பட்ட ஆரோன் மீதும் பொறாமை கொண்டார்கள்.
- 17 பூமி பிளந்தது, தாத்தானை விழுங்கியது; அபிராமோடு சேர்ந்திருந்தவர்களையும் புதைத்துப் போட்டது.
- 18 அவர்களைப் பின்பற்றியவர்களின் மத்தியில் நெருப்புப் பற்றியெரிந்தது; கொடியவர்களை ஒரு சுவாலை எரித்து அழித்துப்போட்டது.
- 19 அவர்கள் ஓரேபில் ஒரு கன்றுக்குட்டியை உண்டுபண்ணி, உலோகத்தால் வார்ப்பிக்கப்பட்ட விக்கிரகத்தை வழிபட்டார்கள்.
- 20 அவர்கள் தங்கள் மகிமையான இறைவனைவிட்டு, புல்லைத் தின்னும் மாட்டின் உருவத்தைப் பற்றிக்கொண்டார்கள்.
- 21 எகிப்திலே பெரிய காரியங்களைச் செய்து, தங்களைக் காப்பாற்றிய இறைவனை அவர்கள் மறந்தார்கள்.
- 22 காமின் நாட்டிலே அற்புதங்களையும், செங்கடலிலே பிரமிக்கத்தக்க செயல்களையும் செய்தவரை மறந்தார்கள்.
- 23 ஆதலால் அவர் அவர்களை அழிக்கப்போவதாகக் கூறினார்; யெகோவாவினால் தெரிந்துகொள்ளப்பட்ட மோசே, யெகோவாவுக்கும் மக்களுக்கும் இடையில் நின்று அவருடைய கோபம் அவர்களை அழிக்காதபடிக்கு கெஞ்சினான்.
- 24 அதின்பின் அவர்கள் நலமான அந்நாட்டை அலட்சியம் செய்தார்கள்; அவருடைய வாக்குத்தத்தத்தை அவர்கள் விசுவாசிக்கவில்லை.
- 25 தங்கள் கூடாரங்களில் அவர்கள் முறுமுறுத்து, யெகோவாவுக்குக் கீழ்ப்படியாதிருந்தார்கள்.
- 26 ஆகையால் அவர் அவர்களைப் பாலைவனத்திலேயே இறந்துபோகும்படி தமது கையை உயர்த்தி அவர்களுக்கு ஆணையிட்டார்.
- 27 அவர்களுடைய சந்ததிகளை பிற நாடுகளிலே சிதறடித்து, அவர்களை நாடெங்கும் பரவச்செய்தார்.
- 28 அப்பொழுது அவர்கள் தங்களைப் பேயோரிலுள்ள பாகாலுடன் இணைத்துக் கொண்டு, உயிரற்ற தெய்வங்களுக்குப் படைக்கப்பட்ட பலிகளைச் சாப்பிட்டார்கள்.
- 29 இப்படி அவர்கள் தங்கள் கொடுமையான செயல்களினால் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; அதினால் அவர்களுக்குள்ளே ஒரு கொள்ளைநோய் பரவியது.
- 30 ஆனால் பினெகாஸ் எழுந்து தலையிட்டதால், அந்தக் கொள்ளைநோய் நிறுத்தப்பட்டது.
- 31 அந்த செயல் என்றென்றும் தலைமுறை தலைமுறையாக அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது.
- 32 மேரிபாவின் தண்ணீர் அருகேயும் அவர்கள் யெகோவாவுக்குக் கோபமூட்டினார்கள்; மோசேக்கும் அதினால் துன்பம் ஏற்பட்டது.
- 33 இறைவனுடைய ஆவியானவருக்கு எதிராக அவர்கள் கலகம் செய்தபடியால், மோசேயின் உதடுகளிலிருந்து கடுமையான வார்த்தைகள் வெளிவந்தன.
- 34 யெகோவா தாம் கட்டளையிட்டபடி அந்த மக்களை அவர் அழிக்கவில்லை.
- 35 மாறாக, அந்த பிற மக்களுடன் கலந்து உறவாடி, அவர்களுடைய பழக்கவழக்கங்களைத் தாங்களும் கைக்கொண்டார்கள்.
- 36 அவர்களுடைய விக்கிரகங்களையே தாங்களும் வழிபட்டார்கள்; அது இஸ்ரயேலருக்கு ஒரு கண்ணியாகியது.
- 37 அவர்கள் தங்கள் மகன்களையும் மகள்களையும் விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்.
- 38 இவ்வாறு தங்கள் மகன் மகள்களுடைய, குற்றமில்லாத இரத்தத்தைச் சிந்தினார்கள்; அவர்கள் கானானிய விக்கிரகங்களுக்குப் பலியிட்டார்கள்; அதினால் நாடு அவர்களுடைய இரத்தத்தால் தூய்மைக்கேடு அடைந்தது.
- 39 அவர்கள் தங்கள் செயல்களினாலே தங்களைக் கறைப்படுத்தினார்கள்; அவர்கள் தங்களுடைய செயல்களின் மூலம் விபசாரம் செய்தனர்.
- 40 ஆதலால், யெகோவா தமது மக்கள்மேல் கோபங்கொண்டார், தமது உரிமைச் சொத்தானவர்களை வெறுத்தார்.
- 41 அவர்களைப் பிற நாட்டினரிடம் ஒப்புக்கொடுத்தார்; அவர்களுடைய எதிரிகள் அவர்களை ஆளுகை செய்தார்கள்.
- 42 அவர்களுடைய பகைவர்கள் அவர்களை ஒடுக்கி, தங்கள் அதிகாரத்திற்குக் கீழ்ப்படுத்தினார்கள்.
- 43 ஆனாலும், யெகோவா பலமுறை அவர்களை விடுவித்தார்; அவர்களோ அவருக்கு எதிராக தொடர்ந்து கலகத்திலே நாட்டம் கொண்டு, பாவஞ்செய்து விழுந்து போனார்கள்.
- 44 ஆனாலும் அவர்களுடைய கதறுதலை யெகோவா கேட்டபோதோ, அவர்களுடைய துன்பத்தைக் கவனத்தில் கொண்டார்.
- 45 அவர்களுக்காக யெகோவா தமது உடன்படிக்கையை நினைத்து, தமது உடன்படிக்கையின் அன்பினால் மனமிரங்கினார்.
- 46 அவர்களைச் சிறைப்பிடித்தவர்கள் அனைவரும், அவர்களுக்கு அனுதாபம் காட்டும்படி செய்தார்.
- 47 எங்கள் இறைவனாகிய யெகோவாவே, எங்களைக் இரட்சியும், பிற நாடுகளிடமிருந்து எங்களைச் சேர்த்துக்கொள்ளும்; அப்பொழுது நாங்கள் உமது பரிசுத்த பெயருக்கு நன்றி செலுத்தி, உம்மைத் துதிப்பதில் மேன்மைபாராட்டுவோம்.
- 48 இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்கு நித்தியத்திலிருந்து நித்தியம் வரைக்கும் துதி உண்டாகட்டும். மக்கள் அனைவரும் சொல்லட்டும்: “ஆமென்!” யெகோவாவைத் துதி.