시편 46편 타밀 OITCE

  1. 1 இறைவன் நமக்கு புகலிடமும் பெலனுமாய் இருக்கிறார், ஆபத்துக் காலத்தில் நம்மோடிருந்து உதவுகிறவர் அவரே.
  2. 2 ஆகையால் பூமி பிளவுண்டு போனாலும் மலைகள் கடலின் நடுவில் விழுந்தாலும்
  3. 3 கடலின் தண்ணீர் கொந்தளித்துப் பொங்கினாலும் அதின் எழுச்சியால் மலைகள் அதிர்ந்தாலும் நாம் பயப்படமாட்டோம்.
  4. 4 ஒரு நதி உண்டு, அதின் நீரோடைகள் மகா உன்னதமானவர் வாசம்பண்ணும் பரிசுத்த இடமான இறைவனின் நகரத்தை மகிழ்ச்சியாக்குகின்றன.
  5. 5 இறைவன் அதற்குள் இருக்கிறார், அது விழுந்து போகாது; அதிகாலையில் இறைவன் அதற்கு உதவி செய்வார்.
  6. 6 நாடுகள் குமுறி எழுகின்றார்கள், அரசுகள் விழுகின்றன; யெகோவா தன் குரலை எழுப்புகிறார், பூமி உருகுகிறது.
  7. 7 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.
  8. 8 யெகோவாவினுடைய செயல்களையும் அவர் பூமியின்மேல் கொண்டுவந்த அழிவுகளையும் வந்து பாருங்கள்.
  9. 9 யெகோவா பூமியின் கடைசிவரை யுத்தங்களை நிறுத்துகிறார்; அவர் வில்லை முறித்து, ஈட்டியை நொறுக்குகிறார்; கேடயங்களை நெருப்பினால் எரிக்கிறார்.
  10. 10 யெகோவா சொல்கிறார், “நீங்கள் அமைதியாய் இருந்து நானே இறைவன் என்று அறிந்துகொள்ளுங்கள். நான் நாடுகளுக்கு மத்தியில் புகழ்ந்து உயர்த்தப்படுவேன், நான் பூமியிலே புகழ்ந்து உயர்த்தப்படுவேன்.”
  11. 11 சேனைகளின் யெகோவா நம்மோடிருக்கிறார்; யாக்கோபின் இறைவன் நமக்கு கோட்டையாய் இருக்கிறார்.