시편 6편 타밀 OITCE

  1. 1 யெகோவாவே, உமது கோபத்தில் என்னைக் கண்டியாதேயும்; உம்முடைய கடுங்கோபத்தில் என்னைத் தண்டியாதேயும்;
  2. 2 யெகோவாவே, நான் சோர்ந்துபோகிறேன், என்னில் இரக்கமாயிரும்; யெகோவாவே, என் எலும்புகள் வேதனைக்குள்ளாகி இருக்கின்றன, என்னைக் குணமாக்கும்.
  3. 3 என் ஆத்துமா துயரத்துக்குள்ளாகி இருக்கிறது. எவ்வளவு காலத்திற்கு யெகோவாவே, இது எவ்வளவு காலத்திற்கு?
  4. 4 யெகோவாவே, என் பக்கமாய்த் திரும்பி என்னை விடுவியும்; உமது உடன்படிக்கையின் அன்பினிமித்தம் என்னைக் காப்பாற்றும்.
  5. 5 இறந்தவர்களில் ஒருவரும் உம்மை நினைவுகூர்வதில்லை. பிரேதக் குழியிலிருந்து உம்மைத் துதிக்கிறவன் யார்?
  6. 6 நான் கலங்கியே இளைத்துப் போனேன். இரவு முழுவதும் என் அழுகையின் வெள்ளத்தால் நான் என் படுக்கையை நிரப்பி, நான் அதைக் கண்ணீரால் நனைக்கிறேன்.
  7. 7 என் கண்கள் துக்கத்தால் பெலவீனமடைகின்றன; என் எல்லா பகைவரின் நிமித்தம் அவைகள் மங்குகின்றன.
  8. 8 அக்கிரம செய்கைக்காரர்களே, நீங்கள் எல்லோரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள்; ஏனெனில் யெகோவா என் அழுகையைக் கேட்டிருக்கிறார்.
  9. 9 இரக்கத்திற்கான என் கதறலை யெகோவா கேட்டார்; யெகோவா என் மன்றாட்டை ஏற்றுக்கொள்வார்.
  10. 10 என்னுடைய எல்லா எதிரிகளும் வெட்கப்பட்டு மனச்சோர்வு அடைவார்கள்; அவர்கள் பின்னிட்டுத் திரும்பி திடீரென வெட்கப்பட்டுப் போவார்கள்.