시편 60편 타밀 OITCE

  1. 1 இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்; நீர் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடம் திரும்பி வாரும்.
  2. 2 நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்; அசைந்து கொண்டிருக்கும் அந்த வெடிப்புகளைச் சரிப்படுத்தும்.
  3. 3 கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்; தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர்.
  4. 4 ஆனால் உமக்குப் பயந்து நடக்கிறவர்கள், வில்லுக்கு தப்பித்துக் கொள்ளுமாறு ஒரு கொடியை உயர்த்தினீர்.
  5. 5 நீர் நேசிப்பவர்கள் மீட்கப்படும்படி, நீர் எங்களைக் காப்பாற்றி, உமது வலதுகரத்தின் வல்லமையினால் எங்களுக்கு உதவிசெய்யும்.
  6. 6 இறைவன் தமது பரிசுத்த இடத்திலிருந்து பேசியது: “நான் வெற்றிகொண்டு சீகேமைப் பிரித்தெடுப்பேன்; சுக்கோத்தின் பள்ளத்தாக்கை அளந்துகொடுப்பேன்.
  7. 7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது; எப்பிராயீம் என் தலைக்கவசம், யூதா என் செங்கோல்.
  8. 8 மோவாப் என் கழுவும் பாத்திரம், நான் ஏதோமின்மீது என் காலணியை எறிவேன்; நான் பெலிஸ்தியாவை வென்று முழக்கமிடுவேன்.”
  9. 9 அரண்சூழ்ந்த நகரத்திற்கு யார் என்னைக் கொண்டுவருவார்? யார் என்னை ஏதோமுக்கு வழிநடத்துவார்?
  10. 10 இறைவனே, எங்களைப் புறக்கணித்தவரும், எங்கள் படைகளுடன் போகாதிருந்தவரும் நீரல்லவா?
  11. 11 பகைவரை மேற்கொள்ள எங்களுக்கு உதவும்; ஏனெனில் மனிதனின் உதவியோ பயனற்றது.
  12. 12 இறைவனாலேயே நாம் வெற்றிபெறுவோம்; அவர் நமது பகைவரை மிதித்துப்போடுவார்.