출애굽기 21장 타밀 OITCE
- 1 “நீ அவர்களுக்கு முன்பாக வைக்கவேண்டிய சட்டங்கள் இவையே:
- 2 “ஒரு எபிரெய அடிமையை நீங்கள் விலைக்கு வாங்கினால், அவன் ஆறு வருடங்கள் மட்டுமே உங்களுக்கு வேலைசெய்யவேண்டும். ஏழாம் வருடத்திலோ, எந்தவித பணத்தையும் கொடுக்காமல் அவன் விடுதலையாகிப் போகவேண்டும்.
- 3 அவன் தனிமையாய் வந்திருந்தால், தனிமையாகவே விடுதலையாகிப் போகவேண்டும். அவன் வருகிறபோது அவனுக்கு ஒரு மனைவியிருந்தால், அவளும் அவனோடுகூடப் போகவேண்டும்.
- 4 ஒரு எஜமான் தனது அடிமைக்கு ஒரு பெண்ணை மனைவியாகக் கொடுத்து, அவள் அவனுக்கு மகன்களையும் மகள்களையும் பெற்றிருந்தால், அந்தப் பெண்ணும் அவள் பிள்ளைகளும் எஜமானுக்கே சொந்தம். அந்த மனிதன் மட்டுமே விடுதலையாகிப் போகவேண்டும்.
- 5 “ஆனால் அந்த அடிமையோ, ‘நான் என் எஜமானையும் என் மனைவியையும் என் பிள்ளைகளையும் நேசிக்கிறேன். அதனால் விடுதலையாகிப்போக நான் விரும்பவில்லை’ என்று அறிவித்தால்,
- 6 அவனுடைய எஜமான் அவனை நீதிபதிகளின் முன்பாக கொண்டுபோக வேண்டும். அவன் இவனை கதவின் அருகேயோ அல்லது கதவு நிலையின் அருகேயோ கொண்டுபோய் ஒரு குத்தூசியினால் அவன் காதைத் துளையிடவேண்டும். அதன்பின் அவன் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு அடிமையாயிருப்பான்.
- 7 “ஒருவன் தன் மகளை அடிமையாக விற்றால், ஆண் அடிமைகள் போவதுபோல் அவள் போகக்கூடாது.
- 8 எஜமான் அவளை தனக்காக தெரிந்தெடுத்திருந்து, அவள் அவனைப் பிரியப்படுத்தாதவளாய்க் காணப்பட்டால், அவள் மீட்கப்பட அவன் அனுமதிக்கவேண்டும். அவளை பிறநாட்டினனுக்கு விற்பதற்கு அவனுக்கு உரிமையில்லை. ஏனெனில் அவன் அவளுக்கு நம்பிக்கை துரோகம் செய்துள்ளான்.
- 9 அவன் அவளைத் தன் மகனுக்குத் தெரிந்தெடுத்திருந்தால், அவளுக்கு ஒரு மகளுக்குரிய உரிமைகளைக் கொடுக்கவேண்டும்.
- 10 எஜமான் இன்னும் ஒரு பெண்ணை திருமணம் செய்தால், முதல் பெண்ணுக்கும் உரிய உடை, உணவு, திருமண உரிமைகள் ஆகியவற்றைக் கொடுக்காமல் விடக்கூடாது.
- 11 அம்மூன்றையும் எஜமான் அவளுக்குக் கொடுக்காவிட்டால், அவள் அவனுக்குப் பணம் ஒன்றும் கொடுக்காமல் விடுதலையாகிப்போகலாம்.
- 12 “ஒரு மனிதனை அடித்துக் கொலை செய்கிறவன் நிச்சயமாக கொலைசெய்யப்பட வேண்டும்.
- 13 ஆனாலும், அவன் அதைத் திட்டமிட்டுச் செய்யாமல், அது நடைபெற இறைவன் இடங்கொடுத்திருந்தால், நான் நியமிக்கப்போகிற ஒரு இடத்திற்கு அவன் ஓடிப்போய் தப்பித்துக்கொள்ளவேண்டும்.
- 14 ஒருவன் சதிசெய்து இன்னொருவனைக் கொலை செய்தால், அவன் என் பலிபீடத்திலிருந்தாலும் அவனைக் கொண்டுபோய் கொலைசெய்யவேண்டும்.
- 15 “தன் தகப்பனையோ தாயையோ தாக்குகிறவன் கொலைசெய்யப்பட வேண்டும்.
- 16 “ஒருவன் இன்னொருவனைக் கடத்திச்சென்று அவனை விற்றாலோ அல்லது அவனைத் தன்னுடன் வைத்திருந்ததாலோ, கடத்திச்சென்றவன் பிடிக்கப்படும்பொழுது கொல்லப்படவேண்டும்.
- 17 “தன் தகப்பனையோ, தன் தாயையோ சபிப்பவன் கொல்லப்படவேண்டும்.
- 18 “மனிதர் வாக்குவாதம் செய்து, ஒருவன் மற்றவனைக் கல்லாலோ அல்லது தன் கருவியினாலோ அடித்ததினால் அவன் சாகாமல் படுக்கையாகவே இருந்து,
- 19 பின்பு எழுந்திருந்து ஒரு கோலை ஊன்றியாவது நடமாடமுடியுமானால், அவனை அடித்தவன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாகமாட்டான். ஆனாலும் அவன், காயப்பட்டவனுக்கு வேலைசெய்ய முடியாத காலத்திற்குரிய இழந்துபோன கூலியைச் செலுத்தவேண்டும். அவன் முற்றிலும் குணப்படும்படி பார்த்துக்கொள்ளவேண்டும்.
- 20 “ஒரு மனிதன் தன் ஆண் அடிமையை அல்லது பெண் அடிமையை கோலினால் அடித்து, அதனால் அந்த அடிமை இறந்தால், அடித்தவன் தண்டிக்கப்பட வேண்டும்.
- 21 ஆனால் அடிபட்ட அடிமை ஓரிரு நாட்களில் எழுந்திருந்தால், எஜமான் தண்டிக்கப்பட வேண்டியதில்லை. ஏனெனில் அடிமை எஜமானின் உடைமை.
- 22 “மனிதர் சண்டையிடுகிறபொழுது கர்ப்பவதியான ஒரு பெண்ணை அடித்ததினால், பெரியகாயமேதுமில்லாமல் அவளுக்கு குறைப்பிரசவம் ஏற்பட்டால், அடித்தவனிடம் அபராதம் வசூலிக்க வேண்டும். அவளுடைய கணவன் கேட்கும் பணத்தைக் கருத்திற்கொண்டு, நீதிமன்றம் அனுமதிப்பதை அபராதமாகச் செலுத்தவேண்டும்.
- 23 அவளுக்குக் கடுமையான காயமேதும் ஏற்பட்டால், உயிருக்குப்பதில் உயிரை நீங்கள் எடுக்கவேண்டும்.
- 24 கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல், கைக்குக் கை, காலுக்குக் கால்,
- 25 சூட்டுக்குப் பதில் சூடும், காயத்துக்குப்பதில் காயமும், தழும்புக்குப்பதில் தழும்புமாக தண்டிக்கப்பட வேண்டும்.
- 26 “ஒரு மனிதன் தன் ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ கண்ணில் அடித்து அழித்துப்போட்டால், அக்கண்ணின் இழப்பை ஈடுசெய்வதற்கு அவர்களை அவன் விடுதலை செய்யவேண்டும்.
- 27 ஆண் அடிமையின் பல்லையோ அல்லது பெண் அடிமையின் பல்லையோ அவன் அடித்து உடைத்தால், பல்லுக்கு இழப்பீடாக அவர்களை விடுதலை செய்யவேண்டும்.
- 28 “ஒரு மனிதனையோ அல்லது ஒரு பெண்ணையோ, ஒரு எருது தன் கொம்பினால் குத்திக்கொன்றால், அந்த எருது கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். அதன் இறைச்சியைச் சாப்பிடக்கூடாது. எருதின் உரிமையாளன் அக்குற்றத்திற்குப் பொறுப்பாளியாகமாட்டான்.
- 29 ஆனாலும் அந்த எருது வழக்கமாக முட்டுகிறதாயிருந்து, அவனுக்கு அதைக்குறித்து எச்சரித்திருந்தும், அவன் அதைக் கட்டிவைக்காததினால் அது ஒரு மனிதனையோ, பெண்ணையோ முட்டிக்கொன்றால், எருது கல்லெறிந்து கொல்லப்படவேண்டும். எருதின் உரிமையாளனும் கொல்லப்படவேண்டும்.
- 30 ஆனாலும் அபராதம் கொடுக்கும்படி அவன் கேட்கப்பட்டால், கேட்கப்பட்ட அபராதத்தைச் செலுத்தித் தன் உயிரை மீட்டுக்கொள்ளலாம்.
- 31 ஒருவனுடைய மகனையோ, மகளையோ எருது குத்திக்கொன்றால் அதற்குரிய சட்டமும் இதுவே:
- 32 அந்த எருது ஒரு ஆண் அடிமையையோ, பெண் அடிமையையோ குத்தினால், எருதின் சொந்தக்காரன் அடிமையின் எஜமானுக்கு முப்பது சேக்கல் வெள்ளிக்காசு கொடுக்கவேண்டும். எருதும் கல்லெறிந்து கொல்லப்படவேண்டும்.
- 33 “ஒரு மனிதன் ஒரு குழியைத் திறந்துவைத்ததாலோ அல்லது ஒரு குழியைவெட்டி அதை மூடுவதற்கு தவறியதாலோ, ஒரு எருது அல்லது கழுதை அதற்குள் விழுந்தால்,
- 34 குழிக்குரியவன் செத்தப்போன மிருகத்துக்கு இழப்பீட்டை, அந்த மிருகத்தின் உரிமையாளனுக்கு கொடுக்கவேண்டும். செத்தப்போன மிருகமோ குழிக்குரியவனுடையதாகும்.
- 35 “ஒரு மனிதனுடைய எருது, மற்றவனுடைய எருதைக் காயப்படுத்துவதினால் அது இறந்தால், உயிரோடிருக்கிற எருதை விற்று, பணத்தை இருவரும் பங்கிடவேண்டும். செத்தப்போன எருதையும் சமமாகப் பங்கிடவேண்டும்.
- 36 ஆனாலும் அது வழக்கமாக முட்டுகிற எருது என்று உரிமையாளன் அறிந்திருந்தும் அதைக் கட்டிவைக்காதிருந்ததால், உரிமையாளன் எருதுக்கு எருது கொடுக்கவேண்டும். செத்தப்போன எருதோ தண்டம் செலுத்தியவனுக்குரியதாகும்.