잠언 10장 타밀 OITCE
- 1 சாலொமோனின் நீதிமொழிகள்: ஞானமுள்ள மகன் தன் தகப்பனுக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறான்; ஆனால் மூடத்தனமுள்ள மகனோ தன் தாய்க்கு துக்கத்தைக் கொடுக்கிறான்.
- 2 நீதியற்ற வழியில் சம்பாதித்த செல்வம் பயனற்றது, ஆனால் நீதியோ ஒருவனை மரணத்திலிருந்து விடுவிக்கிறது.
- 3 யெகோவா நீதிமான்களைப் பசியாயிருக்க விடுவதில்லை, ஆனால் கொடியவர்களின் பேராசையை அவர் நிறைவேற்றமாட்டார்.
- 4 சோம்பேறிகளின் கைகள் வறுமையை உண்டாக்கும், ஆனால் உழைக்கும் கைகளோ செல்வத்தைக் கொண்டுவரும்.
- 5 கோடைகாலத்தில் பயிர்களை சேர்க்கிறவன் விவேகமுள்ள மகன்; ஆனால் அறுவடைக்காலத்தில் தூங்குகிறவனோ, அவமானத்தைக் கொண்டுவரும் மகன்.
- 6 நீதிமான்களின் தலையை ஆசீர்வாதங்கள் முடிசூட்டும்; ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
- 7 நீதிமான்களைப் பற்றிய நினைவு ஆசீர்வாதமாயிருக்கும்; ஆனால் கொடியவர்களின் பெயரோ அழிந்துபோகும்.
- 8 இருதயத்தில் ஞானமுள்ளவர்கள் கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்கள்; ஆனால் அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
- 9 நேர்மையாய் நடக்கிறவர்கள் பாதுகாப்பாக நடக்கிறார்கள், ஆனால் நேர்மையற்ற வழிகளில் நடக்கிறவர்கள் வீழ்ந்து போவார்கள்.
- 10 தீயநோக்கத்தோடு கண் சிமிட்டுகிறவன் துயரத்தை உண்டாக்குகிறான்; அலட்டுகிற மூடன் அழிந்துபோகிறான்.
- 11 நீதிமான்களின் வாய் வாழ்வின் நீரூற்று, ஆனால் கொடியவர்களின் பேச்சோ வன்முறை நிறைந்திருக்கும்.
- 12 பகைமை பிரிவினையைத் தூண்டிவிடுகிறது; அன்போ பிழைகளையெல்லாம் மன்னித்து மறக்கிறது.
- 13 பகுத்தறிகிறவர்களின் உதடுகளில் ஞானம் காணப்படுகிறது, ஆனால் மூடரின் முதுகுக்கு ஏற்றது பிரம்பே.
- 14 ஞானமுள்ளவர்கள் அறிவைச் சேர்த்துவைக்கிறார்கள்; ஆனால் மூடரின் வாயோ அழிவை அழைக்கிறது.
- 15 பணக்காரர்களின் செல்வம் அவர்களுடைய அரணான பட்டணம்; ஆனால் ஏழையின் வறுமை அவர்களின் அழிவு.
- 16 நீதிமான்களின் கூலி, அவர்களுக்கு வாழ்வு, ஆனால் கொடியவர்கள் தங்கள் பாவத்திற்கேற்ற தண்டனையை அடைவார்கள்.
- 17 நற்கட்டுப்பாட்டை ஏற்றுக்கொள்ளுகிறவன் வாழ்வின் வழியைக் காட்டுகிறான்; ஆனால் கண்டித்துத் திருத்துவதை அலட்சியம் செய்கிறவனோ, மற்றவர்களையும் வழிதவறப்பண்ணுகிறான்.
- 18 பகையை மறைப்பவன் பொய்யன்; அவதூறு பரப்புகிறவன் மூடன்.
- 19 அதிக வார்த்தைகள் பேசும் இடத்தில் பாவமில்லாமற்போகாது; ஆனால் தன் நாவைக் கட்டுப்படுத்துகிறவனோ விவேகமுள்ளவன்.
- 20 நீதிமான்களின் நாவு தரமான வெள்ளி, ஆனால் கொடியவர்களின் இருதயமோ சொற்பவிலையும் பெறாது.
- 21 நீதிமான்களின் வார்த்தைகள் அநேகருக்கு ஊட்டம்; ஆனால் மூடர்கள் மதிகேட்டினால் சாகிறார்கள்.
- 22 யெகோவாவின் ஆசீர்வாதம் செல்வத்தைக் கொண்டுவருகிறது; அதனுடன் அவர் துன்பத்தைச் சேர்க்கமாட்டார்.
- 23 தீங்கு செய்வது மூடர்களுக்கு வேடிக்கையானது; ஆனால் ஞானம் புரிந்துகொள்ளுதல் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியானது.
- 24 கொடியவர்கள் எதற்குப் பயப்படுகிறார்களோ, அது அவர்களுக்கு நேரிடும்; நீதிமான்கள் விரும்புவது கொடுக்கப்படும்.
- 25 சுழல் காற்று அடித்துச் செல்லும்போது, கொடியவர்கள் இல்லாமற்போவார்கள்; ஆனால் நீதிமான்கள் என்றென்றைக்கும் உறுதியாய் நிலைத்து நிற்பார்கள்.
- 26 பற்களுக்குப் புளிப்பும், கண்களுக்கு புகையும் எப்படியோ, சோம்பேறியும் தன்னை அனுப்புகிறவர்களுக்கு அப்படி இருக்கிறான்.
- 27 யெகோவாவுக்குப் பயந்து நடப்பது வாழ்நாட்களை நீடிக்கும், ஆனால் கொடியவர்களின் வருடங்களோ குறைக்கப்படும்.
- 28 நீதிமான்களின் நம்பிக்கை மகிழ்ச்சியாயிருக்கும், ஆனால் கொடியவர்களின் எதிர்பார்ப்போ ஒன்றுமில்லாமற்போம்.
- 29 யெகோவாவின் வழி நீதிமான்களுக்கு புகலிடம், ஆனால் தீமை செய்பவர்களுக்கு அது அழிவு.
- 30 நீதிமான்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை; ஆனால் கொடியவர்கள் நாட்டில் நிலைத்திருக்கமாட்டார்கள்.
- 31 நீதிமான்களின் பேச்சு ஞானத்தைக் கொடுக்கும், ஆனால் வஞ்சகநாவு அழிக்கப்படும்.
- 32 நீதிமான்களின் உதடுகள் தகுதியானவற்றைப் பேசும்; ஆனால் கொடியவர்களின் வாயோ வஞ்சகமான வார்த்தைகளைப் பேசும்.