잠언 5장 타밀 OITCE
- 1 என் மகனே, என் ஞானத்தைக் கவனத்தில்கொள், எனது புத்திமதிகளை மிகக் கவனமாகக் கேள்.
- 2 அப்பொழுது அறிவுடைமையுடன் நடந்துகொள்வாய்; உன் உதடுகள் அறிவைப் பாதுகாக்கும்.
- 3 ஏனெனில் விபசாரியின் உதடுகள் தேனைச் சிந்தும், அவளுடைய பேச்சு எண்ணெயைவிட மிருதுவாயிருக்கும்;
- 4 ஆனால் முடிவோ, அவள் வேம்பைப்போல் கசப்பாயும், இருபக்கமும் கூர்மையுள்ள வாளைப்போலவும் இருப்பாள்.
- 5 அவளுடைய பாதங்கள் மரணத்திற்குச் செல்கின்றன; அவள் காலடிகளோ நேரே பாதாளத்திற்கு வழிநடத்துகின்றன.
- 6 அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
- 7 ஆகவே என் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; நான் சொல்வதைவிட்டு விலகவேண்டாம்.
- 8 அவளுக்குத் தூரமான வழியில் நடங்கள், அவளுடைய வீட்டின் வாசலையும் மிதிக்கவேண்டாம்.
- 9 இல்லையென்றால், உங்களுடைய கனத்தை மற்றவர்களிடமும் உங்களுடைய வாழ்நாட்களை கொடூரர்களிடமும் இழந்துவிடுவீர்கள்;
- 10 வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
- 11 உங்களுடைய வாழ்க்கையின் முடிவில், உங்கள் தசையும் உடலும் நலியும்போது வேதனையால் புலம்புவீர்கள்.
- 12 அப்பொழுது நீங்கள், “ஐயோ, நான் அறிவுரையை வெறுத்தேனே, திருத்தத்தை எனது இருதயம் அலட்சியம் செய்ததே!
- 13 நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.
- 14 நான் இறைவனின் மக்கள் கூட்டத்தில் தீராத பிரச்சனைக்குள்ளாகி விட்டேனே” என்று சொல்வீர்கள்.
- 15 நீ உனது சொந்தக் கிணற்றின் தண்ணீரையே குடி, நீ உனது சொந்த நீரூற்றிலிருந்தே தண்ணீரைப் பருகு.
- 16 உனது ஊற்றுகள் வீதிகளில் வழிந்தோட வேண்டுமோ? உனது நீரோடைகள் பொது இடங்களில் ஓடவேண்டுமோ?
- 17 அவை உன்னுடையவைகளாக மட்டுமே இருக்கட்டும், அவற்றை அறியாதவருடன் பகிர்ந்துகொள்ளக் கூடாது.
- 18 உனது ஊற்று ஆசீர்வதிக்கப்படுவதாக, நீ உனது வாலிப காலத்தின் மனைவியுடன் மகிழ்ந்திருப்பாயாக.
- 19 அவள் உனக்கு அன்பான பெண்மான் போலவும் அழகியமான் போலவும் இருப்பாளாக, அவளுடைய மார்பகங்களே எந்நாளும் உன்னைத் திருப்தியாக்கட்டும்; அவளுடைய அன்பினால் நீ எப்பொழுதும் கவரப்படுவாயாக.
- 20 என் மகனே, ஒரு விபசாரியினால் நீ ஏன் கவரப்படவேண்டும்? இன்னொருவனின் மனைவியின் மார்பை நீ ஏன் தழுவவேண்டும்?
- 21 மனிதரின் வழிகள் எல்லாம் யெகோவாவுக்குமுன் வெளியரங்கமாய் இருக்கின்றன, அவர்களுடைய பாதைகளை எல்லாம் அவர் ஆராய்ந்து பார்க்கிறார்.
- 22 கொடியவர்கள் தம்முடைய தீயசெயல்களாலே அகப்படுகிறார்கள்; அவர்களுடைய பாவக்கயிறுகள் அவர்களை இறுக்கிக் கட்டுகின்றன.
- 23 அவர்கள் நற்கட்டுப்பாடு இல்லாததினால் சாவார்கள், அவர்களுடைய மூடத்தனத்தின் மிகுதியினால் வழிவிலகிப் போவார்கள்.