예레미야애가 3장 타밀 OITCE
- 1 அவருடைய கோபத்தின் பிரம்பினால் உண்டான வேதனையைக் கண்ட மனிதன் நானே.
- 2 அவர் என்னை வெளியே துரத்தி, வெளிச்சத்தில் அல்ல, இருளிலேயே நடக்கச் செய்தார்.
- 3 உண்மையாக, திரும்பதிரும்ப நாள்முழுவதும் அவர் தமது கையை என்மேல் திருப்பினார்.
- 4 எனது தசையையும் தோலையும் முதுமையடையும்படி செய்தார், என் எலும்புகளையும் உடைத்துவிட்டார்.
- 5 அவர், கசப்பும் கஷ்டமும் முற்றுகையிட்டு என்னைச் சூழும்படி செய்தார்.
- 6 வெகுகாலத்திற்குமுன் இறந்தவர்களைப்போல், என்னை இருளில் குடியிருக்கப் பண்ணினார்.
- 7 நான் தப்பிவிடாதபடி அவர் என்னைச் சுற்றி வேலியடைத்தார்; அவர் பாரமான சங்கிலிகளை என்மேல் சுமத்தினார்.
- 8 நான் உதவிக்காகக் கூப்பிடும்போதோ, கதறி அழுகிறபோதோ அவர் என் மன்றாட்டைக் கேட்க மறுக்கிறார்.
- 9 செதுக்கிய கற்களால் அவர் என் வழியைத் தடைசெய்திருக்கிறார்; அவர் என் பாதைகளைக் கோணலாக்கியிருக்கிறார்.
- 10 பதுங்கியிருக்கும் கரடியைப்போலவும், மறைந்திருக்கும் சிங்கத்தைப் போலவும்,
- 11 அவர் என்னைப் பாதையிலிருந்து இழுத்து, என்னை உருக்குலைத்து உதவியின்றிக் கைவிட்டார்.
- 12 அவர் தம்முடைய வில்லை வளைத்து, தமது அம்புகளுக்கு என்னை இலக்காக்கினார்.
- 13 அவர் தன்னுடைய அம்புக் கூட்டிலிருந்த அம்புகளினால் என் இருதயத்தைக் குத்தினார்.
- 14 நான் என்னுடைய எல்லா மக்களுக்கும் ஒரு சிரிப்புக்குரிய பொருளானேன்; அவர்கள் நாள்முழுவதும் பாடலினால் என்னை ஏளனம் செய்கிறார்கள்.
- 15 அவர் என்னை கசப்பினால் நிரப்பி, காடியின் கசப்பினால் என்னை வெறுப்படையச் செய்தார்.
- 16 அவர் என் பற்களைச் சரளைக் கல்லினால் உடைத்தார்; அவர் என்னைப் புழுதியில் மிதித்துவிட்டார்.
- 17 நான் சமாதானத்தை இழந்திருக்கிறேன்; சுகவாழ்வு என்ன என்பதையும் மறந்துவிட்டேன்.
- 18 ஆகையால் நான் கூறினதாவது, “என் சீர்சிறப்பும், யெகோவாவிடம் நான் கொண்டிருந்த எல்லா எதிர்பார்ப்பும் இல்லாமல் போயிற்று.”
- 19 நான் எனது துன்பத்தையும், அலைச்சலையும், அதன் மனக் கசப்பையும், காடியையும் நினைவுகூருகிறேன்.
- 20 நான் அவைகளை நன்கு நினைவுகூருகிறேன், அப்பொழுது என் ஆத்துமா எனக்குள்ளே சோர்ந்துபோயிற்று.
- 21 ஆயினும் நான் இதை மனதில் கொண்டேன். அதனால் எனக்கு நம்பிக்கை உண்டு:
- 22 அதாவது யெகோவாவின் பெரிதான அன்பினாலே நாம் அழிக்கப்படாமலிருக்கிறோம். ஏனெனில் அவரது இரக்கத்திற்கு முடிவேயில்லை.
- 23 உமது அன்பும் இரக்கமும் காலைதோறும் புதிதாயிருக்கின்றன; உமது உண்மை பெரியது.
- 24 நான் எனக்குள் சொல்லிக்கொள்கிறேன், “யெகோவாவே என் உரிமைப் பங்கு; ஆகையால் நான் அவருக்காகக் காத்திருப்பேன்.”
- 25 யெகோவாவிடம் எதிர்பார்ப்பு வைக்கிறவருக்கும், அவரைத் தேடுகிறவர்களுக்கும் அவர் நல்லவர்.
- 26 எனவே யெகோவாவின் இரட்சிப்புக்காக அமைதியாய் காத்திருப்பது நல்லது.
- 27 இளைஞனாய் இருக்கும்போதே அவரது கண்டனத்தின் நுகத்தைச் சுமப்பது ஒரு மனிதனுக்கு நல்லது.
- 28 யெகோவா தாமே அதை அவன்மேல் வைத்தபடியால், அவன் மவுனமாய் தனிமையாய் அனுபவிக்கட்டும்.
- 29 அவன் புழுதியில் தன் முகத்தைப் புதைக்கட்டும், ஒருவேளை இன்னமும் அவனுக்கு எதிர்பார்ப்பு இருக்கலாம்.
- 30 அவன் தன்னை அடிப்பவனுக்குத் தன் மறு கன்னத்தைக் கொடுக்கட்டும், பகைவன் கொடுக்கும் அவமானங்களை ஏற்றுக்கொள்ளட்டும்.
- 31 ஏனென்றால், ஆண்டவரால் ஒருவரும் என்றென்றும் கைவிடப்படுவதில்லை.
- 32 அவர் துக்கத்தை வருவித்தாலும், அவர் இரக்கம் காண்பிப்பார். அவரது நேர்மையான அன்பு அவ்வளவு பெரியது.
- 33 அவர் துன்பத்தையோ துக்கத்தையோ மனிதரின் பிள்ளைகள்மேல் விருப்பத்துடன் வருவிப்பதில்லை.
- 34 நாட்டிலுள்ள சிறைக் கைதிகளையெல்லாம் கால்களின்கீழ் மிதிப்பதையும்,
- 35 ஒருவனின் மனித உரிமைகளை மகா உன்னதமானவரின் முன்னிலையில் மறுப்பதையும்,
- 36 ஒரு மனிதனுக்கு நீதி வழங்கப்படாதிருப்பதையும் யெகோவா காணாதிருப்பாரோ?
- 37 யெகோவா உத்தரவிடாவிட்டால், எதையாவது பேசி அதை நிகழப்பண்ண யாரால் முடியும்?
- 38 பேரழிவு, நல்ல காரியங்கள் ஆகிய இரண்டும் மகா உன்னதமான இறைவனுடைய வாயிலிருந்தல்லவோ வருகின்றன.
- 39 வாழ்கிற எந்த மனிதனும், தன் பாவங்களுக்காகத் தண்டிக்கப்படும்போது, ஏன் முறையிடவேண்டும்?
- 40 ஆகவே நாங்கள் எங்கள் வழிகளை ஆராய்ந்து சோதிப்போம், யெகோவாவிடம் திரும்புவோம்.
- 41 எங்கள் இருதயங்களையும், கைகளையும் பரலோகத்திலிருக்கும், இறைவனுக்கு நேராக உயர்த்தி:
- 42 “நாங்கள் பாவம் செய்து கலகம் பண்ணினோம், நீர் எங்களை மன்னிக்கவில்லை.
- 43 “நீர் கோபத்தினால் உம்மை மூடிக்கொண்டு எங்களைப் பின்தொடர்ந்தீர்; இரக்கமின்றி எங்களைக் கொன்றுபோட்டீர்.
- 44 மேகத்தினால் நீர் உம்மை மூடிக்கொண்டிருப்பதால், மன்றாட்டு எதுவும் உம்மிடத்தில் வராது.
- 45 நீர் எங்களை நாடுகளுக்குள் குப்பையும் கூழமுமாக ஆக்கியிருக்கிறீர்.
- 46 “எங்கள் பகைவர்கள் யாவரும் தங்கள் வாயை விரிவாகத் திறந்து எங்களுக்கு எதிராகப் பேசுகிறார்கள்.
- 47 எங்கள்மேல் பயங்கரமும் கண்ணியும், பாழும் அழிவும் வந்தன.”
- 48 என் மக்கள் அழிக்கப்பட்டதனால் என் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய் ஓடுகிறது.
- 49 என் கண்கள் ஓய்வின்றி, கண்ணீர் சிந்திக்கொண்டிருக்கும்.
- 50 பரலோகத்திலிருந்து யெகோவா கண்ணோக்கிப் பார்க்கும் வரைக்கும்.
- 51 என் நகரத்திலுள்ள பெண்களின் நிலைமையை நான் காண்கையில், என் ஆத்துமா துக்கிக்கிறது.
- 52 காரணமின்றி எனக்குப் பகைவர்களாயிருந்தவர்கள், என்னை ஒரு பறவையைப்போல் வேட்டையாடினார்கள்.
- 53 அவர்கள் என் வாழ்வை முடிக்க முயன்று, குழியில் தள்ளி என்மேல் கற்களை எறிந்து மூடினார்கள்;
- 54 வெள்ளம் என் தலையை மூடிக்கொண்டது. நான் அழிந்து போகப்போகிறேன் என்று நினைத்தேன்.
- 55 யெகோவாவே, குழியின் ஆழத்திலிருந்து, உமது பெயரைச்சொல்லிக் கூப்பிட்டேன்.
- 56 “ஆறுதலுக்காகக் கதறும் என் சத்தத்திற்கு உமது செவியை மூடிக்கொள்ளாதேயும்” என்ற என் விண்ணப்பத்தை நீர் கேட்டீர்.
- 57 நான் உம்மை நோக்கிக் கூப்பிட்டபோது, நீர் என் அருகே வந்து, “நீ பயப்படாதே” என்றீர்.
- 58 யெகோவாவே, நீரே என் வழக்கை பொறுப்பேற்றீர்; என் உயிரை மீட்டுக்கொண்டீர்.
- 59 யெகோவாவே! எனக்குச் செய்யப்பட்ட தீமைகளை நீர் கண்டிருக்கிறீர். நீர் எனக்காக வாதாடும்!
- 60 அவர்களுடைய பழிவாங்குதலின் ஆழத்தையும், அவர்கள் எனக்கெதிராகப் போட்ட சதித்திட்டங்களையும் கண்டிருக்கிறீர்.
- 61 யெகோவாவே, அவர்களுடைய எல்லா அவமதிப்புகளையும், எனக்கெதிரான அவர்களுடைய எல்லா சதிகளையும் கேட்டீர்;
- 62 அதை என் பகைவர்கள் நாள்முழுவதும் இரகசியமாய்ப் பேசி, எனக்கு எதிராய் முணுமுணுக்கிறார்கள்.
- 63 அவர்களைப் பாரும்! உட்கார்ந்தாலும் நின்றாலும், அவர்கள் தங்கள் பாடல்களால் என்னை கேலி செய்கிறார்கள்.
- 64 யெகோவாவே, அவர்களுக்குத் தகுந்த பதில் செய்யும். அவர்களின் கைகள் செய்தவற்றுக்காக பதில் செய்யும்.
- 65 அவர்களுடைய இருதயத்தின்மேல் திரைபோடும், உமது சாபம் அவர்கள்மேல் இருக்கட்டும்.
- 66 கோபத்தோடு அவர்களைப் பின்தொடர்ந்து, யெகோவாவின் வானங்களின் கீழ் இருந்து அவர்களை அழித்துப்போடும்.