마태복음 18장 타밀 OITCE
- 1 அந்த வேளையில் சீடர்கள் இயேசுவிடம் வந்து, “பரலோக அரசில் யார் பெரியவன்?” என்று கேட்டார்கள்.
- 2 அவர் ஒரு சிறுபிள்ளையை தன்னிடமாக அழைத்து, அவர்கள் நடுவில் நிறுத்தினார்.
- 3 அவர் அவர்களிடம், “நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், நீங்கள் மனமாற்றம் அடைந்து சிறுபிள்ளைகளைப்போல் ஆகாவிட்டால் ஒருபோதும் பரலோக அரசிற்குள் செல்லமாட்டீர்கள்.
- 4 ஆதலால், இந்தச் சிறுபிள்ளையைப்போல் தன்னைத் தாழ்த்துகிறவனே பரலோக அரசில் பெரியவனாய் இருக்கிறான்” என்றார்.
- 5 “இப்படி ஒரு சிறுபிள்ளையை என் பெயரில் ஏற்றுக்கொள்ளுகிறவன் என்னையும் ஏற்றுக்கொள்ளுகிறான்.
- 6 “என்னில் விசுவாசம் வைத்துள்ள, இந்தச் சிறியவர்களில் எவரையாவது பாவத்தில் விழப்பண்ணினால், அவனுடைய கழுத்திலே பெரிய திரிகைக் கல்லொன்றைக் கட்டி, கடலின் ஆழத்தில் அவன் தள்ளப்படுவது அவனுக்கு நலமாயிருக்கும்.
- 7 மக்களைப் பாவத்தில் விழப்பண்ணும், காரியங்களின் நிமித்தம், உலகத்திற்கு ஐயோ! இப்படிப்பட்ட காரியங்கள் வரவேண்டியதே. ஆனால் யார் மூலம் அது வருகிறதோ அந்த மனிதனுக்கு ஐயோ!
- 8 உனது கையோ அல்லது காலோ உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. இரண்டு கைகளையும், இரண்டு கால்களையும் உடையவனாய் நித்திய நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும், ஊனமாகவோ முடமாகவோ நித்திய வாழ்விற்குள் செல்வது உனக்குச் சிறந்தது.
- 9 உனது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. இரண்டு கண்களுடையவனாய் நரகத்தின் நெருப்பிற்குள் தள்ளப்படுவதைப் பார்க்கிலும் ஒரு கண்ணுடன் நித்திய வாழ்விற்குள் செல்வது சிறந்தது.
- 10 “நீங்கள் இந்தச் சிறியவர்களில் ஒருவனையும் அலட்சியம் பண்ணாதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன், பரலோகத்திலுள்ள அவர்களுக்குரிய இறைத்தூதர்கள் எனது பரலோக பிதாவின் முகத்தை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
- 11 ஏனெனில் மானிடமகன் வழிதப்பிப் போனவர்களை இரட்சிக்கவே வந்தார்.
- 12 “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஒருவனுக்கு நூறு ஆடுகள் இருந்தாலும், அவற்றில் ஒன்று வழிதவறிப் போனால், அந்தத் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் மலைப்பகுதியில் விட்டுவிட்டு, வழி தவறியதைத் தேடிப் போகமாட்டானோ?
- 13 நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், அவன் அதைக் கண்டுபிடிக்கும்போது, வழிதவறிப் போகாத தொண்ணூற்றொன்பது ஆடுகளைவிட, அந்த ஒரு ஆட்டைக் குறித்து அதிகமாக சந்தோஷப்படுகிறான்.
- 14 அதுபோலவே இந்தச் சிறியவர்களில் ஒருவனும் வழிதவறிப் போவது உங்கள் பரலோக பிதாவின் விருப்பமல்ல.
- 15 “உன் சகோதர சகோதரிகளுள் ஒருவர் உனக்கு எதிராகப் பாவம்செய்தால், நீ போய் அவருடைய குற்றத்தை அவருக்குச் சுட்டிக்காட்டு. உங்கள் இருவருக்கும் இடையில் மட்டுமே அது செய்யப்படட்டும். அவர் உனக்குச் செவிகொடுத்தால், நீ உனது சகோதரன் அல்லது சகோதரியை இழக்காமல் காத்துக்கொள்வாய்.
- 16 ஆனால் அவர் உனக்குச் செவிகொடாவிட்டால், ‘எல்லா காரியங்களும் இரண்டு அல்லது மூன்று சாட்சிகளின் மூலம் உறுதி செய்யப்படும்படி,’ வேறு ஒருவரையோ இருவரையோ உன்னுடன்கூட கூட்டிக்கொண்டுபோ.
- 17 அவர் அவர்களுக்கும் செவிகொடுக்க மறுத்தால், அதைத் திருச்சபைக்குக் கூறு; அவர் திருச்சபைக்கும் செவிகொடுக்க மறுத்தால், அவரை இறைவனை அறியாதவரைப் போலவும் வரி வசூலிக்கிறவரைப் போலவும் நடத்து.
- 18 “மேலும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் எதைப் பூமியில் கட்டுகிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீங்கள் பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறீர்களோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்.
- 19 “மீண்டும் நான் உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் கேட்கும் எதைக் குறித்தாவது பூமியிலே உங்களில் இருவர் ஒருமனப்பட்டிருந்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவினால் அது உங்களுக்காகச் செய்யப்படும்.
- 20 ஏனெனில் எங்கே இரண்டு அல்லது மூன்றுபேர் என் பெயரில் ஒன்றாய்கூடி இருக்கிறார்களோ, அங்கே நான் அவர்களுடன் இருக்கிறேன்” என்றார்.
- 21 அதற்குப் பின்பு பேதுரு இயேசுவிடம் வந்து அவரிடம், “ஆண்டவரே, என் சகோதரன் எனக்கெதிராகப் பாவம் செய்யும்போது, அவனை நான் எத்தனை முறை மன்னிக்க வேண்டும்? ஏழுமுறை வரைக்குமோ?” எனக் கேட்டான்.
- 22 இயேசு மறுமொழியாக, “ஏழுமுறை மட்டுமல்ல, எழுபது முறைக்கும் அதிகமாக” என்று நான் உனக்குச் சொல்கிறேன் என்றார்.
- 23 “பரலோக அரசானது ஒரு அரசன் தனது வேலைக்காரர்களுடன் கணக்குப் பார்க்க வந்ததுபோல் இருக்கிறது.
- 24 அவன் கணக்குப் பார்க்கத் தொடங்கியபோது, பத்து கோடி பொற்காசுகள் கடன்பட்ட ஒருவன் கொண்டுவரப்பட்டான்.
- 25 அவனோ அதைச் செலுத்தமுடியாத நிலையில் இருந்தான். அதனால் அவனையும், அவனது மனைவியையும், பிள்ளைகளையும், அவனிடத்தில் உள்ளவை எல்லாவற்றையும் விற்றுக் கடனைத் திருப்பிச் செலுத்தும்படி, அவனுடைய எஜமான் உத்தரவிட்டான்.
- 26 “வேலைக்காரனோ அவனுக்கு முன்னால் மண்டியிட்டு, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் எல்லாவற்றையும் திரும்பக் கொடுப்பேன்’ என்று கெஞ்சிக்கேட்டான்.
- 27 வேலைக்காரனின் எஜமான் அவனில் அனுதாபப்பட்டு, அவனுடைய கடனை ரத்து செய்து, அவனைப் போகவிட்டான்.
- 28 “ஆனால் அந்த வேலைக்காரன் வெளியே போனபோது, தன்னிடத்தில் நூறு வெள்ளிக்காசுகளை கடன்பட்டிருந்த தன் உடன்வேலைக்காரனைக் கண்டான். அவன் அவனைப் பிடித்து தொண்டையை நெரித்து, ‘நீ என்னிடத்தில் கடன்பட்டதைத் திருப்பிக் கொடு’ என வற்புறுத்திக் கேட்டான்.
- 29 “அவனுடைய உடன்வேலைக்காரன் காலில் விழுந்து, ‘என்னிடத்தில் பொறுமையாய் இரும், நான் உமக்குத் திருப்பிக் கொடுப்பேன்’ எனக் கெஞ்சிக்கேட்டான்.
- 30 “ஆனால் அவனோ அதற்கு மறுத்து, அந்தக் கடனைக் கட்டித் தீர்க்கும் வரைக்கும், அவனைச் சிறையில் அடைத்தான்.
- 31 நடந்தவற்றைக் கண்ட மற்ற வேலைக்காரர் மிகவும் துக்கப்பட்டு, எல்லாவற்றையும் தங்கள் அரசனிடம் போய்ச் சொன்னார்கள்.
- 32 “அப்பொழுது அரசன் அந்த வேலைக்காரனைக் கூப்பிட்டு, அவனைப் பார்த்து, ‘கொடுமையான வேலைக்காரனே, நீ என்னிடம் கெஞ்சிக் கேட்டபடியினால், நான் உனது கடனையெல்லாம் மன்னித்தேன்.
- 33 நான் உனக்கு இரக்கம் காட்டியது போல, நீயும் உனது உடன்வேலைக்காரனுக்கு இரக்கம் காட்டியிருக்க வேண்டுமல்லவா?’ என்று கேட்டான்.
- 34 அவனுடைய எஜமான் கோபங்கொண்டு, அவனது கடன் முழுவதையும் கொடுத்துத் தீர்க்கும்வரை அவனைச் சித்திரவதை செய்யப்படும்படி சிறைக் காவலரிடம் ஒப்புக்கொடுத்தான்.
- 35 “நீங்களும் உங்கள் சகோதரன் அல்லது சகோதரியை மனப்பூர்வமாய் மன்னிக்காவிட்டால், இவ்வாறே எனது பரலோக பிதாவும் உங்களை நடத்துவார்” என்றார்.