마태복음 1장 타밀 OITCE
- 1 இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு; இவர் ஆபிரகாமின் வம்சத்தானாகிய தாவீதின் வம்சத்தினராவார்.
- 2 ஆபிரகாம் ஈசாக்கின் தகப்பன், ஈசாக்கு யாக்கோபின் தகப்பன், யாக்கோபு யூதாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன்,
- 3 யூதா பாரேஸுக்கும் சாராவுக்கும் தகப்பன், அவர்களின் தாய் தாமார், பாரேஸ் எஸ்ரோமுக்குத் தகப்பன், எஸ்ரோம் ஆராமுக்குத் தகப்பன்,
- 4 ஆராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் நகசோனின் தகப்பன், நகசோன் சல்மோனின் தகப்பன்,
- 5 சல்மோன் போவாஸின் தகப்பன், போவாஸினுடைய தாய் ராகாப், போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத்தினுடைய தாய் ரூத், ஓபேத் ஈசாயின் தகப்பன்,
- 6 ஈசாய் தாவீது அரசனுக்குத் தகப்பன். தாவீது சாலொமோனுக்குத் தகப்பன், இவனது தாய் உரியாவின் மனைவியாயிருந்தவள்.
- 7 சாலொமோன் ரெகொபெயாமுக்குத் தகப்பன், ரெகொபெயாம் அபியாவுக்குத் தகப்பன், அபியா ஆசாவுக்குத் தகப்பன்,
- 8 ஆசா யோசபாத்தின் தகப்பன், யோசபாத் யோராமுக்குத் தகப்பன், யோராம் உசியாவின் தகப்பன்,
- 9 உசியா யோதாமின் தகப்பன், யோதாம் ஆகாஸின் தகப்பன், ஆகாஸ் எசேக்கியாவின் தகப்பன்,
- 10 எசேக்கியா மனாசேயின் தகப்பன், மனாசே ஆமோனின் தகப்பன், ஆமோன் யோசியாவின் தகப்பன்,
- 11 யோசியா எகோனியாவுக்கும் அவன் சகோதரர்களுக்கும் தகப்பன். அக்காலத்தில் யூதர்கள் பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டார்கள்.
- 12 பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டபின்: எகோனியா சலாத்தியேலுக்குத் தகப்பனானான், சலாத்தியேல் செருபாபேலுக்குத் தகப்பன்,
- 13 செருபாபேல் அபியூதுக்குத் தகப்பன், அபியூத் எலியாக்கீமுக்குத் தகப்பன், எலியாக்கீம் ஆசோருக்குத் தகப்பன்,
- 14 ஆசோர் சாதோக்கிற்குத் தகப்பன், சாதோக் ஆகீமிற்குத் தகப்பன், ஆகீம் எலியூத்திற்குத் தகப்பன்,
- 15 எலியூத் எலெயாசாருக்குத் தகப்பன், எலெயாசார் மாத்தானுக்குத் தகப்பன், மாத்தான் யாக்கோபுக்குத் தகப்பன்,
- 16 யாக்கோபு யோசேப்புக்குத் தகப்பன், யோசேப்பு மரியாளின் கணவன், மரியாளிடம் கிறிஸ்து எனப்படுகிற இயேசு பிறந்தார்.
- 17 இவ்வாறு ஆபிரகாமிலிருந்து தாவீதுவரை பதினான்கு தலைமுறைகளும், தாவீதிலிருந்து பாபிலோனுக்கு நாடுகடத்தப்படும்வரை பதினான்கு தலைமுறைகளும், பாபிலோனுக்கு நாடுகடத்தப்பட்டதில் இருந்து கிறிஸ்துவரை பதினான்கு தலைமுறைகளும் இருந்தன.
- 18 இயேசுகிறிஸ்துவின் பிறப்பு இவ்வாறு நிகழ்ந்தது: இயேசுவின் தாய் மரியாள் யோசேப்பைத் திருமணம் செய்வதற்கென நிச்சயிக்கப்பட்டிருந்தாள். ஆனால் அவர்கள் ஒன்றுசேர்ந்து வாழும் முன்பே அவள் பரிசுத்த ஆவியினால் கருவுற்றிருந்தது தெரியவந்தது.
- 19 அவளது கணவன் யோசேப்பு ஒரு நீதிமானாயிருந்தான். எனவே அவளை மக்கள் முன்பு வெளிப்படையாக அவமானப்படுத்த விரும்பாமல், திருமண ஒப்பந்தத்தை இரகசியமாக முறித்துவிட நினைத்தான்.
- 20 யோசேப்பு இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபோது, கர்த்தரின் தூதன் அவனுக்குக் கனவில் தோன்றி, “தாவீதின் மகனாகிய யோசேப்பே, நீ மரியாளை உனது மனைவியாக சேர்த்துக்கொள்ளத் தயங்காதே, ஏனெனில் அவள் பரிசுத்த ஆவியாலேயே கருவுற்றிருக்கிறாள்.
- 21 அவள் ஒரு மகனைப் பெறுவாள்; நீ அவருக்கு, ‘இயேசு’ என்று பெயரிட வேண்டும். ஏனெனில் அவர் தமது மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார்” என்றான்.
- 22 கர்த்தர் தமது இறைவாக்கினன் மூலமாகச் சொல்லியிருந்தது நிறைவேறவே இவை நடந்தன:
- 23 “ஒரு கன்னிப்பெண் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெறுவாள். அவரை இம்மானுயேல் என அழைப்பார்கள்.” இம்மானுயேல் என்பதன் அர்த்தம், “இறைவன் நம்மோடு இருக்கிறார்” என்பதே.
- 24 யோசேப்பு நித்திரையை விட்டெழுந்ததும், கர்த்தரின் தூதன் தனக்குக் கட்டளையிட்டபடியே, மரியாளைத் தனது மனைவியாக வீட்டிற்குக் கூட்டிச்சென்றான்.
- 25 ஆனால் அவள் ஒரு மகனைப் பெற்றெடுக்கும்வரை யோசேப்பு அவளுடன் சேரவில்லை. யோசேப்பு அவருக்கு இயேசு என்று பெயரிட்டான்.