마태복음 22장 타밀 OITCE
- 1 மீண்டும் இயேசு அவர்களோடு உவமைகள் மூலம் பேசி, பரலோக அரசைப் பற்றிச் சொன்னதாவது:
- 2 “பரலோக அரசு ஒரு அரசன் தனது மகனின் திருமண விருந்தை ஆயத்தப்படுத்தியதற்கு ஒப்பாயிருக்கிறது.
- 3 விருந்துக்கு அழைக்கப்பட்டவர்களை வரும்படி அழைப்பதற்கு, அவன் தன் வேலைக்காரர்களை அவர்களிடம் அனுப்பினான். அவர்களோ வர மறுத்துவிட்டார்கள்.
- 4 “அவன் இன்னும் சில வேலைக்காரர்களை அனுப்பி, ‘அழைக்கப்பட்டவர்களிடம், நான் என்னுடைய விருந்தை ஆயத்தம் செய்திருக்கிறேன்: சிறப்பான விருந்து உங்களுக்கென்று படைக்கப்பட்டு, எல்லாம் ஆயத்தமாய் இருக்கின்றன. திருமண விருந்துக்கு வாருங்கள் என்று சொல்லுங்கள்’ என்றான்.
- 5 “ஆனால் அழைக்கப்பட்டவர்களோ, அதைக் கவனிக்காமல் தங்கள் வேலைகளுக்குச் சென்றார்கள்; ஒருவன் வயலுக்கும் வேறொருவன் தனது வியாபாரத்துக்கும் போனான்.
- 6 மற்றவர்களோ, அரசனுடைய வேலைக்காரர்களைப் பிடித்துத் துன்புறுத்தி அவர்களைக் கொன்றார்கள்.
- 7 அரசன் கடுங்கோபமடைந்தான். அவன் தனது படைகளை அனுப்பி, அந்தக் கொலைகாரர்களை அழித்து, அவர்களுடைய பட்டணத்தை எரித்தான்.
- 8 “பின்பு அரசன் தன் வேலைக்காரர்களிடம், ‘திருமண விருந்து ஆயத்தமாயிருக்கிறது. ஆனால் நான் அழைத்தவர்களோ, அதற்குத் தகுதியற்றவர்களாய்ப் போனார்கள்.
- 9 இப்பொழுது வீதிகளின் சந்திகளுக்குப் போங்கள், நீங்கள் காண்கிறவர்கள் யாராயிருந்தாலும் விருந்துக்கு அழைத்து வாருங்கள்’ என்றான்.
- 10 எனவே வேலைக்காரர்கள் வெளியே வீதிகளில் போய், நல்லவர்களும் கெட்டவர்களுமான தாங்கள் கண்ட எல்லா மக்களையும் கூட்டிச் சேர்த்தார்கள். திருமண மண்டபம் விருந்தாளிகளால் நிரம்பியது.
- 11 “அரசன் விருந்தினரைப் பார்க்க உள்ளே வந்தபோது, திருமண உடை உடுத்தியிராத ஒருவன் அங்கேயிருப்பதைக் கண்டான்.
- 12 அரசன், ‘நண்பனே, திருமண உடையின்றி, நீ எப்படி இங்கே வந்தாய்?’ என்று கேட்டான். அவன் பேச்சற்று நின்றான்.
- 13 “அப்பொழுது அரசன் ஏவலாட்களிடம், ‘அவனுடைய கையையும் காலையும் கட்டி, வெளியே இருளில் தள்ளுங்கள், அங்கே பற்கடிப்பும் அழுகையும் இருக்கும்’ என்றான்.
- 14 “ஏனெனில் அநேகர் அழைக்கப்படுகிறார்கள், ஆனால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் சிலர்.”
- 15 பின்பு பரிசேயர் போய், இயேசுவின் வார்த்தையிலே அவரைக் குற்றம் கண்டுபிடிப்பதற்குத் திட்டமிட்டார்கள்.
- 16 பரிசேயர்கள் ஏரோதியர்களுடன் தங்கள் சீடரை இயேசுவினிடத்தில் அனுப்பினார்கள். அவர்கள் அவரிடம், “போதகரே, நீர் நேர்மையானவரும், இறைவனின் வழியை சத்தியத்தின்படியே போதிக்கிறவருமாய் இருக்கிறீர். நீர் மனிதருக்கு முகதாட்சண்யம் காட்டாதவராய் இருப்பதால் ஆள்பார்த்து எதையும் செய்யமாட்டீர் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம்.
- 17 ஆகவே ரோமப் பேரரசன் சீசருக்கு வரி செலுத்துவது சரியானதா? இல்லையா? உம்முடைய அபிப்பிராயத்தை எங்களுக்குச் சொல்லும்” என்றார்கள்.
- 18 ஆனால் இயேசுவோ, அவர்களுடைய தீய நோக்கத்தை அறிந்தவராய் அவர்களிடம், “வேஷக்காரர்களே! நீங்கள் ஏன் என்னைச் சோதிக்கிறீர்கள்?
- 19 வரியைச் செலுத்துவதற்காகப் பயன்படுத்தும் நாணயத்தை எனக்குக் காட்டுங்கள்” என்றார். அவர்கள் ஒரு வெள்ளிக்காசை அவரிடம் கொண்டுவந்தார்கள்.
- 20 இயேசு அவர்களிடம் அந்த நாணயத்தைக் காட்டி, “இந்த நாணயத்திலுள்ள உருவம் யாருடையது? இதில் பொறிக்கப்பட்டிருக்கும் எழுத்துக்கள் யாருடையவை?” என்று கேட்டார்.
- 21 அதற்கு அவர்கள், “ரோமப் பேரரசன் சீசருடையது” என்றார்கள். அப்பொழுது இயேசு அவர்களிடம், “சீசருடையதை சீசருக்கும், இறைவனுடையதை இறைவனுக்கும் கொடுங்கள்” என்றார்.
- 22 அவர்கள் இதைக் கேட்டவுடன் வியப்படைந்து இயேசுவை விட்டுச் சென்றார்கள்.
- 23 அதே நாளில் உயிர்த்தெழுதல் இல்லை என்று சொல்கிற சதுசேயர் அவரிடத்தில் ஒரு கேள்வி கேட்கும்படி வந்தார்கள்.
- 24 “போதகரே, ‘ஒருவன் பிள்ளைகள் இல்லாதவனாய் இறந்துபோனால், அவனுடைய சகோதரன் இறந்தவனுடைய மனைவியைத் திருமணம் செய்து, இறந்தவனுக்காகப் பிள்ளைகளைப் பெற்றெடுக்க வேண்டும்’ என்று மோசே எங்களுக்குச் சொல்லியிருக்கிறார்.
- 25 எங்கள் மத்தியில் ஏழு சகோதரர்கள் இருந்தார்கள். மூத்தவன் திருமணம் செய்து, பின் இறந்துபோனான். அவனுக்குப் பிள்ளைகள் இல்லாததால், அவன் தனது மனைவியைத் தனது சகோதரனுக்கு விட்டுப்போனான்.
- 26 அப்படியே இரண்டாம், மூன்றாம் சகோதரருக்கும் முறையே ஏழாவது சகோதரன்வரை எல்லோருக்கும் அவள் மனைவியானாள்.
- 27 கடைசியாக அந்தப் பெண்ணும் இறந்துபோனாள்.
- 28 அப்படியானால், இறந்தவர்கள் உயிருடன் எழுந்திருக்கும்போது, அவள் யாருக்கு மனைவியாய் இருப்பாள்? ஏழு சகோதரர்களும் அவளைத் திருமணம் செய்தார்களே” என்றார்கள்.
- 29 இயேசு அவர்களுக்குப் பதிலாக, “நீங்கள் வேதவசனங்களையும் இறைவனுடைய வல்லமையையும் அறியவில்லை. அதனால்தான் நீங்கள் தவறான எண்ணம் கொண்டவர்களாய் இருக்கிறீர்கள்.
- 30 உயிர்த்தெழுதலில் மக்கள் திருமணம் செய்வதும் இல்லை, திருமணம் செய்துகொடுப்பதும் இல்லை; அவர்கள் பரலோகத்திலுள்ள தூதரைப் போல் இருப்பார்கள்.
- 31 இறந்தவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து, இறைவன் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசிக்கவில்லையா?
- 32 ‘நானே ஆபிரகாமின் இறைவன், ஈசாக்கின் இறைவன், யாக்கோபின் இறைவன்’ அவர் இறந்தவர்களின் இறைவன் அல்ல, உயிருள்ளவர்களின் இறைவன்” என்றார்.
- 33 மக்கள் கூட்டம் இதைக் கேட்டபோது, அவருடைய போதனைகளைக் குறித்து வியப்படைந்தார்கள்.
- 34 இயேசு சதுசேயர்களை வாயடைத்துப் போகச் செய்தார் என்று கேள்விப்பட்டபோது, பரிசேயர் ஒன்றுகூடி அவரிடம் வந்தார்கள்.
- 35 அவர்களில் மோசேயின் சட்டத்தில் தேறின ஒருவன் ஒரு கேள்வியைக் கேட்டு அவரைச் சோதித்தான்:
- 36 “போதகரே, மோசேயின் சட்டத்தில் மிகப்பெரிய கட்டளை எது?” என்றான்.
- 37 இயேசு அவனுக்குப் பதிலாக, “உன் இறைவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழு மனதோடும் அன்பு கூருவாயாக.
- 38 இதுவே முதலாவதும் பெரியதுமான கட்டளை.
- 39 இரண்டாவதும் இதைப் போன்றதே: நீ உன்னில் அன்பாய் இருப்பதுபோல, உன் அயலானிலும் அன்பாய் இரு.
- 40 முழு மோசேயின் சட்டமும், இறைவாக்குகளும் இந்த இரண்டு கட்டளைகளிலும் அடங்கி இருக்கின்றன” என்றார்.
- 41 பரிசேயர் ஒன்றுகூடியபோது, இயேசு அவர்களிடம்,
- 42 “நீங்கள் கிறிஸ்துவைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? அவர் யாருடைய மகன்?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “அவர் தாவீதின் மகன்” என்று பதிலளித்தார்கள்.
- 43 அதற்கு இயேசு அவர்களிடம், “அப்படியானால் தாவீது பரிசுத்த ஆவியானவரைக்கொண்டு பேசுகையில், அவரைக், ‘கர்த்தர்’ என்று அழைத்தது எப்படி?” ஏனெனில் தாவீது,
- 44 “ ‘கர்த்தர் என் கர்த்தரிடம் சொன்னதாவது: “நான் உமது பகைவரை உமது பாதபடியாக்கும்வரை, எனது வலதுபக்கத்தில் உட்காரும்” ’ என்று சொல்லியிருக்கிறாரே.
- 45 தாவீது அவரைக் ‘கர்த்தர்,’ என்று அழைத்தான். அப்படியிருக்க கிறிஸ்து எப்படி அவனுக்கு மகனாய் இருக்கமுடியும்?” என்று கேட்டார்.
- 46 அவருக்கு யாராலும், ஒரு வார்த்தையும் பதிலாகச் சொல்ல முடியவில்லை. அன்றிலிருந்து, ஒருவரும் அவரிடம் எந்தக் கேள்வியும் கேட்கத் துணியவில்லை.