마태복음 4장 타밀 OITCE
- 1 அதற்குப் பின்பு இயேசு பிசாசினால் சோதிக்கப்படுவதற்காக ஆவியானவராலே பாலைவனத்துக்கு வழிநடத்தப்பட்டார்.
- 2 இயேசு இரவு பகல் நாற்பது நாட்கள் உபவாசித்து முடித்தபின், பசியாயிருந்தார்.
- 3 சோதனைக்காரன் இயேசுவினிடத்தில் வந்து, “நீர் இறைவனின் மகன் என்றால், இந்தக் கற்களிடம் அப்பமாகும்படி சொல்லும்” என்றான்.
- 4 அதற்கு இயேசு, “ ‘மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, இறைவனுடைய வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையினாலும் வாழ்வான்’ என்று எழுதப்பட்டிருக்கிறது” எனப் பதிலளித்தார்.
- 5 பின்பு சாத்தான் அவரைப் பரிசுத்த நகரத்திற்குக் கொண்டுபோய், ஆலயத்தின் மிக உயரமான முனையில் நிற்கச் செய்தான்.
- 6 அவன், “நீர் இறைவனுடைய மகனானால் கீழே குதியும். ஏனெனில்: “ ‘இறைவன் தமது தூதர்களுக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார். உமது கால்கள் கல்லில் மோதாதபடி, அவர்கள் உம்மைத் தமது கரங்களில் தாங்கிக்கொள்வார்கள் என்று எழுதியிருக்கிறதே,’ ” என்றான்.
- 7 அதற்கு இயேசு, “உனது இறைவனாகிய கர்த்தரைச் சோதிக்க வேண்டாம் என்றும் எழுதியிருக்கிறதே” எனப் பதிலளித்தார்.
- 8 மீண்டும், சாத்தான் அவரை மிக உயரமான மலைக்குக் கொண்டுபோனான் அங்கிருந்து உலகத்தின் எல்லா அரசுகளையும் அவற்றின் மகிமையையும் அவருக்குக் காண்பித்தான்.
- 9 “நீர் என்னை விழுந்து வணங்கினால், இவை எல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன் என்றான்.”
- 10 இயேசு அவனிடம், “சாத்தானே, என்னைவிட்டு அப்பாலே போ! ‘உனது இறைவனாகிய கர்த்தரை வழிபட்டு, அவர் ஒருவரையே பணிந்துகொள்’ ” என்றும் எழுதியிருக்கிறது என்று சொன்னார்.
- 11 அப்பொழுது சாத்தான் அவரைவிட்டுச் சென்றான், தூதர்கள் வந்து இயேசுவுக்குப் பணிவிடை செய்தார்கள்.
- 12 யோவான் சிறையில் அடைக்கப்பட்டதை இயேசு கேள்விப்பட்டபோது, அவர் கலிலேயாவுக்குத் திரும்பி வந்தார்.
- 13 அவர் நாசரேத்தை விட்டு கப்பர்நகூமுக்குப் போய், அங்கே வாழ்ந்தார், அது செபுலோன், நப்தலி பகுதிகளிலுள்ள கடற்கரைக்கு அருகே இருந்தது.
- 14 இறைவாக்கினன் ஏசாயா மூலமாய்:
- 15 “செபுலோன் நாடே, நப்தலி நாடே, யோர்தானின் மறுபக்கமாக கடலுக்குப் போகும் வழியே, யூதரல்லாதவர் வாழும் கலிலேயாவிலே,
- 16 இருளில் வாழும் மக்கள் பேரொளியைக் கண்டார்கள்; மரண இருள்சூழ்ந்த நாட்டில் வாழ்வோர்மேல் வெளிச்சம் பிரகாசித்தது,” என்று சொல்லப்பட்டவை நிறைவேறும்படியே இப்படி நடந்தது.
- 17 அந்த வேளையிலிருந்து இயேசு, “மனந்திரும்புங்கள், பரலோக அரசு சமீபித்திருக்கிறது” என்று பிரசங்கிக்கத் தொடங்கினார்.
- 18 இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.
- 19 இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.
- 20 உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
- 21 இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார்.
- 22 உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.
- 23 இயேசு கலிலேயா முழுவதும் சென்று, யூதரின் ஜெப ஆலயங்களில் போதித்து, பரலோக அரசின் நற்செய்தியைப் பிரசங்கித்தார், மக்களுக்கு இருந்த எல்லா விதமான வியாதிகளையும் நோய்களையும் குணமாக்கினார்.
- 24 இயேசுவைப்பற்றிய செய்தி, சீரியா முழுவதும் பரவியது. மக்கள் அவரிடம், பல்வேறு பிணிகளாலும் வாதைகளாலும் வேதனையுற்ற நோயாளிகளையும், தீய ஆவி பிடித்தவர்களையும், வலிப்பு உள்ளவர்களையும், முடக்குவாதம் உள்ளவர்களையும் கொண்டுவந்தார்கள்; இயேசு அவர்களைக் குணமாக்கினார்.
- 25 கலிலேயா, தெக்கப்போலி எருசலேம், யூதேயா மற்றும் யோர்தானுக்கு மறுபக்கத்திலுமிருந்து பெருந்திரளான மக்கள் இயேசுவைப் பின்தொடர்ந்தார்கள்.