요한복음 9장 타밀 OITCE
- 1 இயேசு நடந்துபோகையில், பிறந்ததிலிருந்தே பார்வைற்றவனாயிருந்த ஒருவனைக் கண்டார்.
- 2 அவருடைய சீடர்கள் அவரிடம், “போதகரே, இவன் பார்வையற்றவனாய் பிறந்தது யார் செய்த பாவத்தினால்? இவனுடைய பாவத்தினாலா? அல்லது இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலா?” என்று கேட்டார்கள்.
- 3 இயேசு அவர்களுக்கு மறுமொழியாக, “இவனுடைய பாவத்தினாலோ, இவனுடைய பெற்றோரின் பாவத்தினாலோ அல்ல. இவனுடைய வாழ்க்கையில் இறைவனுடைய செயல்கள் வெளிப்படும்படியாகவே இப்படி ஏற்பட்டிருக்கிறது.
- 4 பகல் வேளையாய் இருக்கும்போதே, என்னை அனுப்பினவருடைய வேலையை நான் செய்யவேண்டும். இரவு வருகிறது, அப்பொழுது ஒருவராலும் வேலைசெய்யமுடியாது.
- 5 நான் உலகத்தில் இருக்கையில், நானே உலகத்தின் வெளிச்சமாய் இருக்கிறேன்” என்றார்.
- 6 இயேசு இவைகளைச் சொல்லியபின், தரையிலே துப்பி, உமிழ் நீரினால் சிறிதளவு சேறுண்டாக்கி, அவனுடைய கண்களிலே அதைப் பூசினார்.
- 7 பின்பு இயேசு அவனிடம், “நீ போய் சீலோவாம் குளத்திலே கழுவு” என்றார். சீலோவாம் என்பதன் அர்த்தம், “அனுப்பப்பட்டவன்” என்பதாகும். அவன் அப்படியே போய் கழுவி பார்வையடைந்து வீடு திரும்பினான்.
- 8 அவனுடைய அயலவரும், முன்பு அவன் பிச்சை கேட்டுக்கொண்டிருந்ததைக் கண்டவர்களும், “இங்கே உட்கார்ந்திருந்து பிச்சை கேட்டவன் இவன் அல்லவா?” என்றார்கள்.
- 9 சிலர், “இது அவன் தான்” என்றார்கள். இன்னும் சிலர், “இல்லை, இது அவனைப் போன்ற வேறொருவன்” என்றார்கள். ஆனால் அவனோ, “நான்தான் அவன்” என்றான்.
- 10 அப்பொழுது அவர்கள் அவனிடம், “அப்படியானால் உனக்கு எப்படி பார்வை கிடைத்தது?” என்றார்கள்.
- 11 அதற்கு அவன், “இயேசு என்று அழைக்கப்படும் ஒருவர் சிறிதளவு சேறுண்டாக்கி, அதை என் கண்களில் பூசி, சீலோவாம் குளத்தில் போய் கழுவும்படி எனக்குச் சொன்னார். அப்படியே நான் போய் கழுவியபோது, என்னால் பார்க்கமுடிந்தது” என்றான்.
- 12 அப்பொழுது அவர்கள் அவனிடம், “அவர் எங்கே?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “எனக்குத் தெரியாது” என்றான்.
- 13 பார்வையற்றவனாயிருந்தவனை மக்கள் பரிசேயரிடம் கொண்டுவந்தார்கள்.
- 14 இயேசு சேறுண்டாக்கி, அந்த மனிதனின் கண்களைத் திறந்த நாள் ஒரு ஓய்வுநாளாயிருந்தது.
- 15 எனவே பரிசேயரும் அவனிடம், “நீ எப்படிப் பார்வை பெற்றாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் எனது கண்களில் சேற்றைப் பூசினார். நான் அதைக் கழுவினேன். இப்பொழுது நான் பார்க்கிறேன்” என்றான்.
- 16 அப்பொழுது பரிசேயரில் சிலர், “இவன் இறைவனிடமிருந்து வந்தவனல்ல. ஏனெனில் இவன் யூதரின் ஓய்வுநாளைக் கைக்கொள்ளவில்லையே” என்றார்கள். அதற்கு மற்றவர்கள், “பாவியான ஒருவனால் இப்படிப்பட்ட அடையாளங்களை எப்படிச் செய்யமுடியும்?” என்றார்கள். அதனால் அவர்களுக்கிடையே பிரிவினை ஏற்பட்டது.
- 17 கடைசியாக அவர்கள் மீண்டும் அந்தக் பார்வையற்றவனைப் பார்த்து, “உனது கண்களைத் திறந்தவரைக் குறித்து நீ என்ன சொல்கிறாய்?” என்று கேட்டார்கள். அதற்கு அவன், “அவர் ஒரு இறைவாக்கினர்” என்றான்.
- 18 பார்வையற்றவனாயிருந்தவனுடைய பெற்றோரைக் கூப்பிட்டு விசாரிக்கும் வரைக்கும், அவன் பார்வையற்றவனாய் இருந்து பார்வை பெற்றான் என்று யூதர்கள் நம்பவில்லை.
- 19 அவர்கள் அவனுடைய பெற்றோரிடம், “பார்வையற்றவனாய்ப் பிறந்தான் என்று நீங்கள் சொன்ன உங்கள் மகன் இவன்தானா? இவன் எப்படி இப்பொழுது பார்வையடைந்தான்?” என்று கேட்டார்கள்.
- 20 அதற்கு அவனுடைய பெற்றோர், “இவன் எங்கள் மகன் என்பதும், இவன் பார்வையற்றவனாய் பிறந்தான் என்பதும் எங்களுக்குத் தெரியும்.
- 21 ஆனால் இவனால் இப்பொழுது எப்படிப் பார்க்க முடிகிறது என்பதோ, இவனுடைய கண்களைத் திறந்தது யார் என்பதோ எங்களுக்குத் தெரியாது. அவனையே கேளுங்கள். அவன் வயது வந்தவனாய் இருக்கிறானே; அவனே தனக்காகப் பேசுவான்” என்றார்கள்.
- 22 அவனுடைய பெற்றோர் யூதத்தலைவர்களுக்கு பயந்தபடியினாலேயே இப்படிச் சொன்னார்கள். ஏனெனில் இயேசுவை யாராவது கிறிஸ்து என அங்கீகரித்தால், அவன் ஜெப ஆலயத்திலிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்று யூதர்கள் ஏற்கெனவே தீர்மானித்திருந்தார்கள்.
- 23 அதனாலேயே அவனுடைய பெற்றோர், “அவன் வயது வந்தவன்; அவனையே கேளுங்கள்” என்று சொன்னார்கள்.
- 24 இரண்டாவது முறையும் அவர்கள் பார்வையற்றவனாயிருந்த அவனைக் கூப்பிட்டு, “நீ இறைவனுக்கு மகிமையைக் கொடு. அவன் ஒரு பாவி என்று எங்களுக்குத் தெரியும்” என்றார்கள்.
- 25 அதற்கு பார்வையற்றவனாயிருந்தவன், “அவர் ஒரு பாவியோ இல்லையோ, எனக்குத் தெரியாது. எனக்கு ஒன்றுமட்டும் தெரியும். நான் பார்வையற்றவனாயிருந்தேன், இப்பொழுது பார்க்கிறேன்!” என்றான்.
- 26 அப்பொழுது அவர்கள் அவனிடம், “அவன் உனக்கு என்ன செய்தான்? அவன் எப்படி உன் கண்களைத் திறந்தான்?” என்று கேட்டார்கள்.
- 27 அவன் அதற்குப் பதிலாக, “ஏற்கெனவே நான் உங்களுக்குச் சொன்னேன். நீங்கள் கேட்கவில்லை. மீண்டும் ஏன் அதைக் கேட்கிறீர்கள்? நீங்களும் அவருடைய சீடர்களாக விரும்புகிறீர்களோ?” என்று கேட்டான்.
- 28 அப்பொழுது அவர்கள் ஆத்திரத்துடன் அவனை அவமதித்துப் பேசி, “நீ அவனுடைய சீடன், நாங்கள் மோசேயின் சீடர்கள்.
- 29 மோசேயுடன் இறைவன் பேசினார் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் இவனைப் பற்றியோ, இவன் எங்கிருந்து வந்தான் என்றோ எங்களுக்குத் தெரியாது” என்றார்கள்.
- 30 அதற்கு அவன், “இது வியப்பாயிருக்கிறது! என் கண்களை அவரே திறந்தார். அப்படியிருந்தும் அவர் எங்கிருந்து வந்தார் என்று உங்களுக்குத் தெரியாது என்கிறீர்களே.
- 31 இறைவன் பாவிகளுக்குச் செவிகொடுப்பதில்லை என்பது நமக்குத் தெரியும். தமது சித்தத்தைச் செய்கிற இறை பக்தியுள்ளவருக்கே அவர் செவிகொடுக்கிறார்.
- 32 பிறந்ததிலிருந்தே பார்வையற்றவனாயிருந்த ஒருவனுடைய கண்கள் திறக்கப்பட்டதை, ஒருவருமே ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை.
- 33 அவர் இறைவனிடமிருந்து வந்திராவிட்டால், அவரால் ஒன்றையுமே செய்திருக்க முடியாது” என்றான்.
- 34 அதற்கு அவர்கள், “பிறப்பிலேயே பாவத்தில் மூழ்கியிருந்த நீ எங்களுக்குப் போதிக்கத் துணிந்துவிட்டாயோ!” என்று சொல்லி அவனை வெளியே தள்ளிவிட்டார்கள்.
- 35 யூதத்தலைவர்கள் அவனை ஜெப ஆலயத்திலிருந்து வெளியே தள்ளிவிட்டார்கள் என்று இயேசு கேள்விப்பட்டார். இயேசு அவனைத் திரும்பவும் கண்டபோது, “நீ மானிடமகனை விசுவாசிக்கிறாயா?” என்று கேட்டார்.
- 36 அதற்கு அவன், “ஐயா, அவர் யார் என்று சொல்லும். அப்பொழுது நான் அவரை விசுவாசிக்கிறேன்” என்றான்.
- 37 அதற்கு இயேசு, “நீ அவரை இப்பொழுது பார்க்கிறாய்; உன்னோடு பேசிக்கொண்டிருக்கிற நானே அவர்” என்றார்.
- 38 அதற்கு அவன், “ஆண்டவரே, நான் விசுவாசிக்கிறேன்” என்று சொல்லி, அவரை வழிபட்டான்.
- 39 அப்பொழுது இயேசு, “நியாயத்தீர்ப்பிற்காகவே நான் இந்த உலகத்திற்கு வந்தேன். இதனால் பார்வையற்றவர்கள் காண்பார்கள். காண்கிறவர்கள் பார்வையற்றவராவார்கள்” என்றார்.
- 40 அப்பொழுது இயேசுவுடன் இருந்த சில பரிசேயர்கள் இதைக் கேட்டு, “என்ன! நாங்களும் பார்வையற்றோர்களோ?” என்று கேட்டார்கள்.
- 41 அதற்கு இயேசு, “நீங்கள் பார்வையற்றவர்களாயிருந்தால், பாவத்தின் குற்றம் உங்களுக்கு இராது; ஆனால் உங்களால் பார்க்கமுடியும் என்று நீங்கள் சொல்கிறபடியால், குற்றம் உங்கள்மேல் இருக்கிறது” என்றார்.