베드로전서 3장 타밀 OITCE
- 1 மனைவிகளே, அவ்வாறே நீங்களும் உங்கள் சொந்த கணவருக்கு பணிந்து நடவுங்கள். அப்பொழுது அவர்களில் யாராவது வசனத்தை ஏற்றுக்கொள்ளாதவர்களாய் இருந்தாலும், வசனமில்லாமலே அவர்களின் மனைவியின் நடத்தையினால் ஒருவேளை ஆதாயப்படுத்தக்கூடும்.
- 2 தூய்மையும் பயபக்தியுமுள்ள உங்களுடைய வாழ்க்கையை அவர்கள் காணட்டும்.
- 3 உங்கள் அழகு, வெளி அலங்காரத்தில் தங்கியிருக்கக் கூடாது. தலைமுடியைப் பின்னுதல், தங்க நகைகளை அணிதல், விலையுயர்ந்த உடைகளை உடுத்துதல் ஆகிய வெளியான அலங்காரத்தினாலல்ல.
- 4 அது உங்கள் உள்ளத்தின் அழகாகவே இருக்கவேண்டும். சாந்தமும் அமைதியும் உள்ள ஆவியே, அழிந்துபோகாத அழகைக் கொடுக்கிறது. அவ்வித அழகே இறைவனின் பார்வையில் உயர்ந்த மதிப்புள்ளது.
- 5 ஏனெனில் இறைவனில் நம்பிக்கையுள்ளவர்களாய், முற்காலத்தில் வாழ்ந்த பரிசுத்த பெண்கள் இவ்விதமாகவே தங்களை அலங்கரித்தார்கள். அவர்கள் தங்கள் சொந்தக் கணவர்களிடம் பணிவுடன் நடந்தார்கள்.
- 6 அவ்விதமாகவே சாராள் ஆபிரகாமைத் தனது எஜமான் என்று அழைத்தபோது, அவனுக்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். நீங்களும் நன்மையானதைப் பயமில்லாமல் செய்தால் அவளுடைய மகள்களாய் இருப்பீர்கள்.
- 7 கணவர்களே, அதுபோலவே உங்கள் மனைவியுடன் சரியான புரிந்துகொள்ளுதலோடு, அக்கறையுடன் வாழ்க்கை நடத்துங்கள். அவர்கள் பலவீனமான இயல்புடையவர்களாயும் இறைவனின் கிருபையின் வாழ்வை உங்களுடனேகூட பெற்றுக்கொள்கிறவர்களாயும் இருப்பதனால், அவர்களை மதித்து நடவுங்கள். அப்படிச் செய்தால் உங்கள் மன்றாட்டுகளுக்கு எவ்விதத் தடையும் ஏற்படாது.
- 8 இறுதியாக, நீங்கள் எல்லோரும் ஒருவரோடொருவர் ஒருமனப்பட்டிருங்கள். இரக்கமுள்ளவர்களாயும், சகோதரரைப்போல் அன்பு காட்டுகிறவர்களாயும் இருங்கள். அனுதாபம் காட்டுங்கள். தாழ்மையுடையவர்களாய் இருங்கள்.
- 9 தீமைக்குப் பதிலாக தீமை செய்யவேண்டாம்; ஏளனத்திற்கு பதிலாக ஏளனம் செய்யவேண்டாம். மாறாக, அவர்களை ஆசீர்வதியுங்கள். ஏனெனில் நீங்கள் ஆசீர்வாதத்தை உரிமையாக்கவே அழைக்கப்பட்டீர்கள்.
- 10 ஏனெனில் வேதவசனத்தில் சொல்லியிருக்கிறதாவது: “வாழ்வை நேசித்து, நல்ல நாட்களைக் காணவிரும்புகிறவன் எவனோ, அவன் தனது நாவைத் தீமையிலிருந்து விலக்கி, தனது உதடுகளை ஏமாற்றுப் பேச்சுகளிலிருந்தும் காத்துக்கொள்ள வேண்டும்.
- 11 அவன் தீமையிலிருந்து விலகி, நன்மை செய்யவேண்டும்; சமாதானத்தைத் தேடி, அதை நாடிச்செல்ல வேண்டும்.
- 12 ஏனெனில், கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் இருக்கின்றன. அவருடைய காதுகள் அவர்களுடைய மன்றாட்டைக் கவனமாய் கேட்கின்றன. ஆனால் கர்த்தருடைய முகமோ தீமை செய்கிறவர்களுக்கு எதிராய் இருக்கிறது.”
- 13 நீங்கள் நன்மைசெய்ய ஆவலுள்ளவர்களாய் இருந்தால், யார் உங்களுக்குத் தீமை செய்வான்?
- 14 ஆனால் நீங்கள் நீதியானதைச் செய்வதனால் துன்பத்தை அனுபவித்தாலும், நீங்கள் இறைவனால் ஆசீர்வதிக்கப்படுவீர்கள். எனவே, “அவர்களுடைய பயமுறுத்துதலுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; கலக்கமடையவும் வேண்டாம்.”
- 15 ஆனால் உங்கள் இருதயங்களில் கிறிஸ்துவை கர்த்தராக ஏற்று, அவரை கனம்பண்ணுங்கள். நீங்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கான காரணம் என்னவென்று உங்களிடம் கேட்கிற ஒவ்வொருவருக்கும் பதில்சொல்வதற்கு எப்பொழுதும் ஆயத்தமுள்ளவர்களாய் இருங்கள்; ஆனால் தயவுடனும் மதிப்புடனுமே நீங்கள் பதில் சொல்லவேண்டும்.
- 16 நீங்கள் நல்மனசாட்சி உடையவர்களாயும் இருக்கவேண்டும்; அப்பொழுது கிறிஸ்துவில் உங்களுக்கிருக்கும் நல்ல நடத்தைக்கு எதிராக, தீய எண்ணத்துடன் பேசுகிறவர்கள், தங்கள் அவதூறுப் பேச்சைக்குறித்து வெட்கமடைவார்கள்.
- 17 தீமை செய்து துன்பப்படுவதைப் பார்க்கிலும், இறைவனுக்கு சித்தமானால் நன்மை செய்து துன்பப்படுவதே சிறந்தது.
- 18 ஏனெனில், கிறிஸ்து பாவங்களுக்காக ஒரே முறையாக இறந்தார். உங்களை இறைவனிடம் கொண்டுவரும்படியாக, நீதிமானான அவர், நீதியற்றவர்களுக்காக இறந்தார். அவரது உடல் கொல்லப்பட்டது, ஆனால் ஆவியில் உயிர்ப்பிக்கப்பட்டார்.
- 19 அந்த ஆவியிலே அவர் போய், சிறையில் இருந்த ஆவிகளுக்குப் பிரசங்கம் செய்தார்.
- 20 அந்த ஆவிகளே வெகுகாலத்திற்கு முன்பு, நோவா பேழை செய்துகொண்டிருந்த நாட்களில், இறைவன் பொறுமையோடு இருந்தும் கீழ்ப்படியாதவைகள். அந்தப் பேழையில், எல்லாமாக எட்டுப் பேராகிய சிலரே தண்ணீரின் வழியாகக் காப்பாற்றப்பட்டார்கள்.
- 21 அதற்கு ஒப்பான இந்த திருமுழுக்கு உடலில் அழுக்கை நீக்குவதற்கு அல்ல, அது இறைவனைப் பற்றும் தெளிவான மனசாட்சியுடன் இருப்போம் என செய்துகொள்ளும் வாக்குறுதியாகும். இந்த திருமுழுக்கு இப்பொழுது இயேசுகிறிஸ்துவினுடைய உயிர்த்தெழுதலினாலே, உங்களை இரட்சிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
- 22 கிறிஸ்து பரலோகத்திற்குப் போய், இறைவனுடைய வலதுபக்கத்தில் இருக்கிறார். இறைத்தூதர்களும், அதிகாரங்களும், வல்லமைகளும் அவருக்கு அடங்கியிருக்கின்றன.