사사기 19장 타밀 OITCE
- 1 அந்நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. அக்காலத்தில் எப்பிராயீம் மலைநாட்டின் ஒரு ஒதுக்குப்புற பகுதியில் லேவியன் ஒருவன் நெடுங்காலமாகக் குடியிருந்தான். அவன் யூதாவிலுள்ள பெத்லெகேம் ஊரைச்சேர்ந்த ஒரு பெண்ணை வைப்பாட்டியாக வைத்திருந்தான்.
- 2 ஆனால் அவளோ அவனுக்குத் துரோகம்செய்து அவனைவிட்டுப் பிரிந்து, யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குத் தன் தகப்பன் வீட்டுக்குப்போய் நான்கு மாதம் அங்கே தங்கியிருந்தாள்.
- 3 அதன்பின் அவளது கணவன் அவளை இணங்கப்பண்ணி மீண்டும் அழைத்து வருவதற்காக அவளிடத்திற்குப் போனான். அவன் தனது வேலைக்காரனோடும், இரண்டு கழுதைகளோடும் போனான். அவள் அவனைத் தன் தகப்பன் வீட்டுக்கு அழைத்துச்சென்றாள். அவள் தகப்பன் அவனைக் கண்டபோது, மகிழ்ச்சியோடு வரவேற்றான்.
- 4 அப்பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனைத் தங்களுடன் இருக்கும்படி கேட்டுக்கொண்டான். எனவே அவன் மூன்று நாட்கள் அங்கே சாப்பிட்டுக் குடித்து, நித்திரை செய்தான்.
- 5 அவர்கள் நான்காம் நாள் அதிகாலையில் எழுந்தார்கள். அவன் பிரயாணத்திற்கு ஆயத்தமானான். ஆனால் பெண்ணின் தகப்பன் தன் மருமகனிடம், “நீ கொஞ்சம் உணவு சாப்பிட்டபின் போகலாமே” என்றான்.
- 6 எனவே இருவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் குடித்தார்கள். பின்பு அப்பெண்ணின் தகப்பன், “தயவுசெய்து இன்றிரவும் நீ இங்கே தங்கி மகிழ்ந்திரு” எனக் கேட்டுக்கொண்டான்.
- 7 திரும்பவும் அவன் எழுந்து புறப்படுகையில் அவனுடைய மாமன் வற்புறுத்திக் கேட்டுக்கொண்டதால் அன்று இரவும் அங்கு தங்கினான்.
- 8 ஐந்தாம் நாள் காலையில் அவன் புறப்படுகையில் அந்தப் பெண்ணின் தகப்பன், “நீ உணவு சாப்பிட்டு மத்தியானத்திற்குப்பின் போகலாம்” என்று சொன்னான். எனவே இருவரும் ஒன்றாகச் சாப்பிட்டார்கள்.
- 9 பின்பு அவன் தனது வைப்பாட்டியுடனும், வேலைக்காரனுடனும் எழுந்து புறப்பட்டான்; அப்பொழுது பெண்ணின் தகப்பனான அவனுடைய மாமன் அவனிடம், “இப்பொழுது சாயங்காலமாயிற்று; இந்த நாளும் முடியப்போகிறது. எனவே இன்றிரவும் இங்கேயே தங்கி மகிழ்ந்திரு. நாளை அதிகாலையில் எழுந்து நீ வீட்டுக்குப் போகலாம்” என்று சொன்னான்.
- 10 ஆனால் அவன் அந்த இரவும் அங்கு தங்கியிருக்க விரும்பாததால், தன் பொதி ஏற்றிய இரண்டு கழுதைகளுடனும், வைப்பாட்டியுடனும் எருசலேம் என அழைக்கப்பட்ட எபூசுக்குப் போனான்.
- 11 அவர்கள் எபூசுவை நெருங்கிக் கொண்டிருக்கையில், இருட்டிக் கொண்டிருந்ததினால் வேலைக்காரன் தன் தலைவனிடம், “வாரும், எபூசியர் இருக்கும் இந்தப் பட்டணத்தில் தங்கி இந்த இரவைக் கழிப்போம்” என்று சொன்னான்.
- 12 அதற்கு அவன் தலைவன், “இல்லை; இவர்கள் இஸ்ரயேலர் அல்லாததால் இவர்களின் பட்டணத்திற்குள் நாம் போகக்கூடாது. நாம் கிபியா பட்டணத்திற்குப் போவோம்” என்று சொன்னான்.
- 13 மேலும் அவன், “வாருங்கள் நாங்கள் கிபியாவுக்கோ, ராமாவுக்கோ போய்ச் சேர்ந்து அவை ஒன்றில் இன்றிரவைக் கழிப்போம்” என்றான்.
- 14 எனவே அவர்கள் போனார்கள். அவர்கள் செல்கையில் பென்யமீனிலுள்ள கிபியாவை நெருங்கியதும் சூரியன் மறைந்துவிட்டது.
- 15 எனவே அவர்கள் இரவைக் கழிப்பதற்காக, அப்பட்டணச் சதுக்கத்திற்குப் போயிருந்தார்கள். ஆனால் யாருமே அவர்களைத் தங்கள் வீட்டிற்கு இரவு தங்கும்படி அழைக்கவில்லை.
- 16 அன்று மாலை நேரத்தில் எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த, கிபியாவில் வாழும் ஒரு வயது முதிர்ந்தவன் தன் வயல் வேலையை முடித்துவிட்டு வந்தான். அவ்விடத்திலுள்ள மனிதர்கள் பென்யமீனியர்.
- 17 பட்டணத்து சதுக்கத்தில் வழிப்போக்கர் இருப்பதைக் கண்ட அந்த முதியவன் அவர்களிடம், “நீங்கள் எங்கே போகிறீர்கள்? எங்கேயிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்டான்.
- 18 அதற்கு அவன், “நாங்கள் யூதாவிலுள்ள பெத்லெகேமிலிருந்து வெகு தொலைவிலிருக்கும் எப்பிராயீம் மலைநாட்டிலுள்ள எங்கள் இருப்பிடத்திற்குப் போக வந்தோம். நான் யூதாவிலுள்ள பெத்லெகேமுக்குப் போனேன். இப்பொழுது யெகோவாவின் ஆலயத்திற்குப் போகிறேன். என்னைத் தங்கள் வீட்டுக்கு அழைத்துப் போவார் எவருமில்லை.
- 19 எங்கள் கழுதைகளுக்கு வைக்கோலும், தீனியும் எங்களிடம் உண்டு. உமது அடியவர்களான எனக்கும், அடியாளுக்கும், எங்களோடிருக்கும் வாலிபனுக்கும் தேவையான உணவும், திராட்சை இரசமும் இருக்கிறது. எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை” எனப் பதிலளித்தான்.
- 20 அதற்கு அந்த முதியவன், “உங்களை என் வீட்டிற்கு வரவேற்கிறேன். உங்களுக்குத் தேவையானவற்றை நான் தருகிறேன். ஆனால் இந்தப் பொது சதுக்கத்தில் மட்டும் இரவிலே தங்கவேண்டாம்” எனச் சொன்னான்.
- 21 அவ்வாறே அவன் அவர்களைத் தன் வீட்டிற்கு அழைத்துச்சென்று, அவனுடைய கழுதைகளுக்குத் தீனி போட்டான். அவர்கள் தங்கள் கால்களைக் கழுவியபின் அவர்களுக்குச் சாப்பிட உணவும் குடிக்க பானமும் கொடுத்தான்.
- 22 இவ்வாறு அவர்கள் மகிழ்ந்திருக்கையில், பட்டணத்திலுள்ள கொடுமையான மனிதர்கள் சிலர் முதியவனின் வீட்டைச் சுற்றிவளைத்தனர். அவர்கள் கதவைப் பலமாக அடித்து, வீட்டின் சொந்தக்காரனான முதியவனிடம் சத்தமாக, “உன்னிடம் வந்த அந்த மனிதனை வெளியே கொண்டுவா; நாங்கள் அவனுடன் பாலுறவு கொள்ளவேண்டும்” எனக் கூப்பிட்டுச் சொன்னார்கள்.
- 23 வீட்டின் சொந்தக்காரன் வெளியே போய் அவர்களிடம், “இல்லை! என் நண்பர்களே இழிவான இச்செயலை செய்யவேண்டாம். இவன் எனது விருந்தினன். ஆகையால் வெட்கக்கேடான இதைச் செய்யாதீர்கள்.
- 24 இங்கே கன்னிகையான எனது மகளும், அந்த மனிதனின் வைப்பாட்டியும் இருக்கிறார்கள். இப்பொழுது நான் அவர்களை வெளியே உங்களிடம் அழைத்து வருகிறேன். நீங்கள் அவர்களை உங்களுக்கு விருப்பமானபடி செய்யுங்கள். ஆனால் இந்த மனிதனுக்கு இந்த வெட்கக்கேடானதைச் செய்யவேண்டாம்” என்று சொன்னான்.
- 25 அவன் சொன்னவற்றை அந்த மனிதர்கள் கேட்கவில்லை. எனவே அந்த லேவியன் தனது வைப்பாட்டியைப் பிடித்து வெளியே நின்ற அவர்களிடத்திற்கு அனுப்பினான். அவர்கள் இரவு முழுவதும் அவளைக் கற்பழித்து கடுமையாக இம்சைப்படுத்தியபின், அதிகாலையில் அவளைப் போகவிட்டனர்.
- 26 பொழுது விடியும் நேரத்தில் அப்பெண் லேவியன் இருந்த வீட்டிற்குப்போய் விடியும்வரை அங்கே வாயிற்படியில் விழுந்துகிடந்தாள்.
- 27 அந்த லேவியன் காலையில் எழுந்து தன் வழியே போவதற்காக வீட்டின் கதவைத் திறந்தான். அப்போது அவனுடைய வைப்பாட்டி வழியின் படியில் தன் இரண்டு கைகளையும் வைத்தவளாக விழுந்து கிடந்ததைக் கண்டான்.
- 28 அவன் அவளிடம், “எழுந்திரு போவோம்” என்றான். ஆனால் அவளிடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை. எனவே இறந்துபோன அவளது உடலைத் தூக்கித் தன் கழுதையின்மேல் போட்டுக்கொண்டு வீட்டுக்குப் போனான்.
- 29 அவன் வீட்டிற்குப் போனவுடனே கத்தியை எடுத்துத் தன் வைப்பாட்டியின் உடலைப் பன்னிரண்டு துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் எல்லா பகுதிகளுக்கும் ஒவ்வொரு துண்டுவீதம் அனுப்பினான்.
- 30 அதைக்கண்ட எல்லோரும், “இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து வந்த காலந்தொடங்கி இப்படியான செயலைக் கண்டதோ கேட்டதோ கிடையாது. எனவே இதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள்; யோசித்து என்ன செய்யவேண்டுமென்று எங்களுக்குச் சொல்லுங்கள்” எனக் கேட்டனர்.