역대상 2장 타밀 OITCE
- 1 இஸ்ரயேலின் மகன்கள்: ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன்,
- 2 தாண், யோசேப்பு, பென்யமீன், நப்தலி, காத், ஆசேர் என்பவர்கள்.
- 3 யூதாவின் மகன்கள்: ஏர், ஓனான், சேலா என்பவர்கள்; இந்த மூவரும் சூவாவின் மகளான கானானிய பெண்ணின் மகன்கள். யூதாவின் மூத்த மகன் ஏர் என்பவன் யெகோவாவின் பார்வையில் கொடுமையானவனாய் இருந்தான். அதனால் யெகோவா அவனைக் கொன்றுபோட்டார்.
- 4 யூதாவின் மருமகள் தாமார் என்பவள் யூதாவுக்கு பேரேஸ், சேரா என்பவர்களைப் பெற்றாள். யூதாவிற்கு மொத்தம் ஐந்து மகன்கள் இருந்தார்கள்.
- 5 பேரேஸின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.
- 6 சேராவின் மகன்கள்: சிம்ரி, ஏத்தான், ஏமான், கல்கோல், தாரா என்னும் ஐந்துபேர்.
- 7 கர்மீயின் மகன்: ஆகார், இவன் யெகோவாவுக்கென விலக்கப்பட்ட பொருட்களை எடுத்ததால், இஸ்ரயேலுக்குக் கேட்டை உண்டுபண்ணினான்.
- 8 ஏத்தானின் மகன்: அசரியா.
- 9 எஸ்ரோனின் மகன்கள்: யெராமியேல், ராம், காலேப்.
- 10 ராம் அம்மினதாபின் தகப்பன், அம்மினதாப் யூதா மக்களுக்குத் தலைவனாக இருந்த நகசோனின் தகப்பன்.
- 11 நகசோன் சல்மாவின் தகப்பன், சல்மா போவாஸின் தகப்பன்,
- 12 போவாஸ் ஓபேத்தின் தகப்பன், ஓபேத் ஈசாயின் தகப்பன்.
- 13 ஈசாய்க்குப் பிறந்தவர்கள்: மூத்த மகன் எலியாப், இரண்டாவது மகன் அபினதாப், மூன்றாவது மகன் சிமெயா,
- 14 நான்காவது மகன் நெதனெயேல், ஐந்தாவது மகன் ரதாயி,
- 15 ஆறாவது மகன் ஓத்சேம், ஏழாவது மகன் தாவீது.
- 16 அவர்களின் சகோதரிகள் செருயாள், அபிகாயில். செருயாளின் மூன்று மகன்கள் அபிசாய், யோவாப், ஆசகேல் என்பவர்கள்.
- 17 அபிகாயில் அமாசாயின் தாய்; அமாசாவின் தகப்பன் இஸ்மயேலியனாகிய யெத்தேர் என்பவன்.
- 18 எஸ்ரோனின் மகன் காலேப் எரீயோத் எனப்பட்ட தன் மனைவியாகிய அசுபாளின்மூலம் பெற்ற மகன்கள்: ஏசேர், ஷோபாப், அர்தோன்.
- 19 அசுபாள் இறந்தபின்பு காலேப் எப்ராத்தைத் திருமணம் செய்தான். அவள் அவனுக்கு ஊர் என்பவனைப் பெற்றாள்.
- 20 ஊர் ஊரியின் தகப்பன், ஊரி பெசலெயேலின் தகப்பன்.
- 21 பின்பு எஸ்ரோன் அறுபது வயதானபோது கீலேயாத்தின் தகப்பன் மாகீரின் மகளைத் திருமணம் செய்து அவளுடன் உறவுகொண்டான். அவள் அவனுக்கு செகூப்பைப் பெற்றாள்.
- 22 செகூப் யாவீரின் தகப்பன்; இவன் கீலேயாத்திலே இருபத்துமூன்று பட்டணங்களைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தான்.
- 23 ஆனால் கேசூர், ஆராம் என்பவர்கள் யாவீரின் கிராமங்களையும், கேனாத்தையும் அதைச் சூழ்ந்திருந்த குடியிருப்புகளான அறுபது ஊர்களையும் கைப்பற்றினார்கள். இவர்கள் எல்லோரும் கீலேயாத்தின் தகப்பனான மாகீரின் சந்ததிகள்.
- 24 எஸ்ரோன் காலேபின் ஊரான எப்பிராத்தாவில் இறந்தபின், அவனுடைய மனைவி அபியாள் அவனுக்கு தெக்கோவாவின் தலைவனான அசூரைப் பெற்றாள்.
- 25 எஸ்ரோனின் முதற்பேறான யெராமியேலின் மகன்கள்: முதற்பேறானவன் ராம், மற்றவர்கள் பூனா, ஓரேன், ஓத்சேம், அகியா.
- 26 யெராமியேலுக்கு அத்தாராள் என்னும் வேறோரு மனைவியும் இருந்தாள்; இவள் ஓனாம் என்பவனின் தாய்.
- 27 யெராமியேலின் முதற்பேறானவனான ராமின் மகன்கள்: மாஸ், யாமின், எக்கேர்.
- 28 ஓனாமின் மகன்கள்: சம்மாய், யாதா. சம்மாயின் மகன்கள்: நாதாப், அபிசூர்.
- 29 அபிசூருடைய மனைவியின் பெயர் அபியாயேல். அவள் அவனுக்கு அக்பான், மோளித் என்பவர்களைப் பெற்றாள்.
- 30 நாதாபின் மகன்கள்: சேலேத், அப்பாயிம். சேலேத் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
- 31 அப்பாயிமின் மகன்: இஷி, அவன் சேசானின் தகப்பன், சேசான் அக்லாயின் தகப்பன்.
- 32 சம்மாயின் சகோதரனான யாதாவின் மகன்கள்: யெத்தெர், யோனத்தான். யெத்தெர் பிள்ளைகள் இல்லாமல் இறந்துபோனான்.
- 33 யோனத்தானின் மகன்கள்: பெலெத், சாசா. இவர்கள் யெராமியேலின் சந்ததிகள்.
- 34 சேசானுக்கு மகன்கள் இல்லை; மகள்கள் மட்டுமே இருந்தார்கள். சேசானுக்கு எகிப்தைச் சேர்ந்த யர்கா என்னும் வேலைக்காரன் ஒருவன் இருந்தான்.
- 35 சேசான் தனது மகளை அவனுடைய வேலைக்காரனாகிய யர்காவுக்குத் திருமணம் செய்துகொடுத்தான். அவர்களுக்கு அத்தாயி என்ற மகன் இருந்தான்.
- 36 அத்தாயி நாத்தானின் தகப்பன்; நாத்தான் சாபாதின் தகப்பன்.
- 37 சாபாத் எப்லாலின் தகப்பன்; எப்லால் ஓபேத்தின் தகப்பன்.
- 38 ஓபேத் ஏகூவின் தகப்பன்; ஏகூ அசரியாவின் தகப்பன்.
- 39 அசரியா ஏலேஸின் தகப்பன்; ஏலேஸ் எலெயாசாவின் தகப்பன்.
- 40 எலெயாசா சிஸ்மாயின் தகப்பன். சிஸ்மாய் சல்லூமின் தகப்பன்.
- 41 சல்லூம் எக்கமியாவின் தகப்பன்; எக்கமியா எலிஷாமாவின் தகப்பன்.
- 42 யெராமியேலின் சகோதரனான காலேபின் மகன்கள்: சீப்பின் தகப்பனாகிய மேசா என்னும் முதற்பேறானவனும், எப்ரோனின் தகப்பனாகிய மரேஷாவின் மகன்களுமே.
- 43 எப்ரோனின் மகன்கள்: கோராகு, தப்புவா, ரெகெம், செமா.
- 44 செமா ரேகேமின் தகப்பன்; ரேகேம் யோர்க்கேயாமின் தகப்பனான ரெக்கேமின் தகப்பன். ரெகெம் சம்மாயின் தகப்பன்.
- 45 சம்மாயின் மகன் மாகோன்; மாகோன் பெத்சூரின் தகப்பன்.
- 46 காலேபின் மறுமனையாட்டி எப்பா என்பவள் ஆரான், மோசா, காசேஸ் என்பவர்களின் தாய். ஆரான் காசேஸின் தகப்பன்.
- 47 யாதாயின் மகன்கள்: ரேகேம், யோதாம், கேசான், பெலெத், எப்பா, சாகாப்.
- 48 காலேபின் மறுமனையாட்டி மாக்காள் என்பவள் சேபேர், திர்கானா ஆகியோரின் தாய்.
- 49 அதோடு அவள் மத்மன்னாவின் தகப்பன் சாகாபையும், மக்பேனாவினதும் கிபியாவினதும் தகப்பனான சேவாவையும் பெற்றாள். அக்சாள் என்பவள் காலேபின் மகள்.
- 50 இவர்கள் எல்லோரும் காலேபின் சந்ததிகளாவர். எப்ராத்தாளின் முதற்பேறானவனான ஊரின் மகன்கள்: கீரியாத்யாரீமின் தகப்பனான சோபால்,
- 51 பெத்லெகேமின் தகப்பனான சல்மா, பெத்காதேரின் தகப்பனான ஆரேப்.
- 52 கீரியாத்யாரீமின் தகப்பனான சோபாலின் சந்ததிகளாவன: ஆரோயேயும், மெனுகோத்தியரின் அரைப்பகுதியினரும்.
- 53 கீரியாத்யாரீமின் குடும்பங்களாவன: இத்திரியர், பூகியர், சுமாத்தியர், மிஸ்ராவியர் ஆகியோரே. இவர்களில் இருந்தே சோராத்தியர், எஸ்தாவோலியர் ஆகிய சந்ததிகள் வந்தனர்.
- 54 சல்மாவின் சந்ததிகள்: பெத்லெகேமியர், நெத்தோபாத்தியர், அதரோத் பெத்யோவாப்பியர், மானாத்தியரின் அரைப்பகுதியினர், சோரியர் ஆகியோரே.
- 55 அத்துடன் யாபேஸில் குடியிருந்த எழுத்தாளரின் வம்சங்கள்: திராத்தியர், சிமாத்தியர், சுக்காத்தியர். இவர்கள் ஆமாத்திலிருந்து வந்த ரேகாப்பின் தகப்பனின் சந்ததியான கேனியர்.