아가 6장 타밀 OITCE
- 1 பெண்களுள் பேரழகியே, உன் காதலர் எங்கே போய்விட்டார்? உன் காதலர் எப்பக்கம் திரும்பிப்போனார்? சொன்னால் உன்னோடு சேர்ந்து நாங்களும் அவரைத் தேடுவோம்.
- 2 என் காதலர் தோட்டங்களில் மேய்வதற்கும், லில்லிப் பூக்களைச் சேர்ப்பதற்கும், நறுமணச்செடிகளின் பாத்திகளுக்கும் போயிருக்கிறார்.
- 3 நான் என் காதலருக்குரியவள், என் காதலர் என்னுடையவர்; அவர் லில்லிப் பூக்களுக்கிடையில் தன் மந்தையை மேய்க்கிறார்.
- 4 என் அன்பே, நீ திர்சா பட்டணத்தைப்போல அழகானவள், எருசலேமைப்போல வசீகரமானவள், கொடிகள் ஏந்தும் படைகளைப்போல கம்பீரமானவள்.
- 5 உன் கண்களை என்னைவிட்டுத் திருப்பு; அவை என்னை மயக்குகின்றன. உனது தலைமுடி கீலேயாத் மலைச்சரிவில் இருந்து இறங்கிவரும் வெள்ளாட்டு மந்தையைப் போன்றது.
- 6 உனது பற்கள் குளிப்பாட்டப்பட்டுக் கரையேறுகிற செம்மறியாட்டு மந்தையைப்போல் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றும் இரட்டைக்குட்டி ஈன்றவை, அவற்றில் எதுவும் மலடாய் அல்ல.
- 7 உனது முகத்திரையின் பின்னால் உள்ள உன் கன்னங்கள் பிளந்த மாதுளம் பழத்திற்கு ஒப்பானவை.
- 8 அறுபது அரசிகளும், எண்பது வைப்பாட்டிகளும்; கணக்கிடமுடியாத கன்னிப்பெண்களும் இருக்கலாம்.
- 9 ஆனால் என் புறாவோ, என் உத்தமியோ ஈடு இணையற்றவள், அவள் தன் தாய்க்கு ஒரே மகள், அவள் அவளைப் பெற்றவளுக்குச் செல்லப்பிள்ளை. கன்னிப்பெண்கள் அவளைக் கண்டு வாழ்த்தினார்கள்; அரசிகளும் வைப்பாட்டிகளும் அவளைப் புகழ்ந்தார்கள்.
- 10 சந்திரனைப்போல் அழகுள்ளவளாயும், சூரியனைப்போல் ஒளியுள்ளவளாயும், அணிவகுத்து நிற்கும் நட்சத்திரங்களைப்போல் கம்பீரமானவளாயும் அதிகாலையைப்போல் தோன்றுகிற இவள் யார்?
- 11 பள்ளத்தாக்கின் புதுத் தளிர்களைப் பார்க்கவும், திராட்சைக்கொடிகள் மொட்டு விட்டிருக்கின்றனவா என்று பார்க்கவும், மாதுளை மரங்கள் பூத்திருக்கின்றனவா என்று பார்க்கவும் நான் வாதுமைத் தோட்டத்திற்குப் போனேன்.
- 12 நான் புரிந்துகொள்ளும் முன்னமே, என் ஆசை என்னை என் மக்களின் அரச தேர்களுக்கு அழைத்துச் சென்றது.
- 13 திரும்பி வா, திரும்பி வா, சூலமித்தியே, நாங்கள் உன்னை நன்றாய்ப் பார்க்கும்படி திரும்பி வா, திரும்பி வா!